
திருச்சி மாவட்டம், முதுவத்தூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்துள்ளனர். அந்த இடத்தில் உள்ள கருவேல மரங்களை சிலர் வெட்டுவதாக முதுவத்தூர் கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார், கிராம உதவியாளர் பிரகாஷ்சீலன் ஆகியோர் அரசு புறம்போக்கு தரிசு நிலத்திற்கு வந்து பார்த்தபோது லாரியில் வெட்டிய கருவேல மரங்களை ஏற்றிக்கொண்டிருந்தனர்.

உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி ஆலோசனையின் பேரில் கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி ஓட்டுநர் திருமலை (37), முதுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மர வியாபாரி செல்வராஜ் (49) ஆகியோரை கைதுசெய்து, வழக்குப் பதிந்து, லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை செய்துவருகின்றனர். தரிசு நிலத்தில் வெட்டிய 5 டன் கருவேல மரங்கள் மற்றும் லாரியைப் பறிமுதல் செய்துள்ளனர்.