Skip to main content

''சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்; கண்காணிப்புக் குழுவுக்கு தெரியுமா?''-பாமக ராமதாஸ் ஆதங்கம்

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

 "People are suffering because they are unable to cope with the price hike" - Pamaka Ramadoss

 

'மளிகைப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தமிழக மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர்' என சென்னையில் விலைவாசி உயர்வு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயிலிருந்து  ரூ.41 ஆகவும்,  நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி விலை ரூ.12 உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல், கடந்த வாரம்  ரூ.118 ஆக இருந்த  ஒரு கிலோ துவரம்பருப்பு விலை இப்போது ரூ.42 உயர்ந்து ரூ.160 ஆக அதிகரித்திருக்கிறது. இது 36% உயர்வு ஆகும். இது வரலாறு காணாத ஒன்றாகும். பிற பருப்பு வகைகளின் விலைகளும், மளிகைப் பொருட்களின் விலைகளும் 8% முதல் 20% வரை உயர்ந்திருக்கின்றன.  சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும்  ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வால்  ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரத்துக் குறைந்தது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று  கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நெல் விளைச்சல் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கும் போதிலும், அரிசி விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கான காரணம் என்ன? என்பதை அரசு ஆராய வேண்டும். தமிழகத்தில் விளைவிக்கப்படும் நெல் பெரும்பாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதுடன், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் உண்ணும் பொன்னி அரிசி பெரும்பாலும் ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து தான் கொண்டு வரப்படுகிறது. இது தான் விலை உயர்வுக்கு காரணம். அரிசி விலை உயர்வைத் தடுக்க தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரிசி வகைகள் தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தமிழக மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பது  விலை கண்காணிப்புக் குழுவுக்கு தெரியுமா? விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இது குறித்த அறிக்கைகளை விலைக் கண்காணிப்புக் குழு அரசிடம் தாக்கல் செய்ததா? என்பது தெரியவில்லை.

 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும். தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு நியாயவிலைக்கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும். அதற்கு வசதியாக விலைக் கட்டுப்பாட்டு நிதியத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை ரூ.100 கோடியிலிருந்து ரூ.1000 கோடியாக உயர்த்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'சரண்டர் ஆன ஒருவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும்?' - அன்புமணி கேள்வி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
 'Why should a surrendered man run away; CBI should investigate'-Anbumani interview

'சரண்டர் ஆனவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும். அதுவும் ஏன் காலை 5:30 மணிக்கு என்ன வேலை? கை விலங்கு இல்லை என்றால் என்ன காரணம்?' என ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  

விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தேர்தல் வாக்குறுதி கொடுத்தது ஒன்று. ஆனால் அரசு செய்வது ஒன்று. காவிரி தண்ணீர் பிரச்சனையை சரியான முறையில் தமிழக அரசு கையாளவில்லை. பிரச்சனை வரும் நேரத்தில் அப்பொழுதுதான் ஒரு கூட்டம் நடத்துவார்கள். நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார்கள். உச்சநீதிமன்றம் செல்வோம் என்று சொன்னார்கள். ஆனாலும் இயற்கை நமக்கு அங்கே கர்நாடகாவில் மழையை கொடுத்ததால் இன்று நாம் கேட்ட தண்ணீரை விட மூன்று மடங்கு அதிக தண்ணீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆறு மாதம் இதைப் பற்றி நாம் பேசப்போவது கிடையாது. அதற்கு பிறகு இந்த பிரச்சனை மீண்டும் வரும் பொழுது அனைத்து கட்சிக் கூட்டம் போடுவோம், உச்சநீதிமன்றம் போவோம். இதற்கு ஒரு நிரந்தர தீர்வுதான் என்ன?

அடுத்தது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம். இந்த சட்டத்தை ரத்து செய்த பிறகு கிட்டத்தட்ட 30 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளார்கள். அதை பற்றி திமுக அரசுக்கு கவலையே கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு சென்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெறுவதற்கு கூட திமுகவிற்கு மனசு கிடையாது. அவர்களுக்கு எல்லாமே வியாபாரம் வணிகம் தான். இதையெல்லாம் திமுக மக்களுக்கு செய்யும் துரோகங்கள். தமிழ்நாட்டினுடைய சட்ட ஒழுங்கு தினமும் ஒரு கொலை என்பதாக இருக்கிறது. மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலை செய்துள்ளார்கள். பாமகவின் நிர்வாகி வெட்டி கொலை, அதற்கு முன்பு ஆம்ஸ்ட்ராங், அதற்கு முன்பு அதிமுக, அதற்கு முன்பு காங்கிரஸ் நிர்வாகி என ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு கொலை நடக்கிறது என்பதால் மக்கள் எல்லாம் அச்சத்தில் பயத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

அது ஒரு பக்கம், அடுத்தப்பக்கம் கள்ளச்சாராயம் ஆறாக பெருகிக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் 11 பேர் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறார். மரக்காணம் சம்பவத்தின் போது இரும்புக் கரம் கொண்டு  வேரோடு அறுப்போம் என வசனம் பேசினார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் அதே வசனம் பேசினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை என்கவுன்டரில் போட்டுள்ளார்கள். சரண்டர் ஆன பிறகு சரண்டர் ஆனவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும். அதுவும் ஏன் காலை 5:30 மணிக்கு என்ன வேலை? கை  விலங்கு இல்லை என்றால் என்ன காரணம். அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம். சிபிஐ விசாரணை வந்தால் தான் முழு உண்மை வெளியே வரும். ஏன் என்கவுன்டர் செய்தார்கள்; இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது வெளிவரும்'' என்றார்.

Next Story

கர்நாடக வேலைவாய்ப்பில் 100 சதவீதம் கன்னடருக்கே; தமிழக அரசு சட்டமியற்ற தயங்குவது ஏன்? - அன்புமணி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Ramadoss question  govt reluctant to legislate to give priority to Tamils ​​in TN employment

கர்நாடகத்தில் தனியார் வேலைவாய்ப்பில் 100% கன்னடருக்கே ஒதுக்கீடு செய்யும் சட்ட முன்வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சட்டமியற்ற திமுக அரசு தயங்குவது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள் அனைத்தையும் முழுக்க முழுக்க கன்னடர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்ற சட்ட முன்வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முன்வரைவு நாளை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய சட்டத்தை கொண்டுவருவாதக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு, அதை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில்,‘‘கர்நாடக மாநில தொழிற்சாலைகள், ஆலைகள் மற்றும் பிற அமைப்புகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதற்கான சட்ட முன்வரைவு’’க்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டால், கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மேலாண்மை பணிகளில் 50 விழுக்காடும், மேலாண்மை அல்லாத பணிகளில் 75 விழுக்காடும், சி மற்றும் டி பிரிவு பணிகளில் 100 விழுக்காடும் கர்நாடக மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். இந்த சட்டம் பிற மாநிலத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் கூட, கர்நாடக மக்களின் வேலை உரிமையை பாதுகாக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

கர்நாடகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலுங்கானத்திலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஆந்திரத்தில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து கூப்பிடும தொலைவில் உள்ள ஸ்ரீசிட்டி தொழில்பேட்டையில் தமிழர்களுக்கு அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. கர்நாடகத்திலும் இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால், கர்நாடகத்திலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும். இதனால், அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வேலைவாய்ப்புகள் இனி பறிக்கப்பட்டுவிடும்.

இந்த நிலையை மாற்றி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80% வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழர்கள் நலன்களைக் காப்பதாகக் கூறி ஆட்சிக்கு வரும் கட்சிகள். இத்தகைய சட்டத்தை இன்று வரை நிறைவேற்றவில்லை.

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை; தடையும் இல்லை. எனவே, இனியும் தயங்காமல்  தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். துணை மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதற்காக வரும் அக்டோபர் மாவட்டம் கூடவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தனியார் நிறுவன வேலைகளில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.” என்று வலியுறுத்துள்ளார்.