Skip to main content

மக்கள் புத்திசாலிகளாம்.. இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்! - திமுகவுக்கு எதிரான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ட்வீட்!

Published on 12/07/2020 | Edited on 13/07/2020

 

People are smart .. we have to wait 5 more years! KT Rajendrapalaji's tweet against DMK!


ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சியினரையும், எதிர்க்கட்சியினர் ஆளும்கட்சியினரையும் விமர்சித்து, ஏதாவது கொளுத்திப் போட்டுக்கொண்டே இருப்பதுதானே அரசியல்?

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு, இது கை வந்த கலை. சர்ச்சைக்குரிய ட்வீட்டால் பறிபோன கட்சியின் மாவட்ட பொறுப்பு திரும்பக் கிடைத்ததும், குஷியாகி மீண்டும்  ‘ட்விட்ட’ ஆரம்பித்துவிட்டார்.

‘திட்ட திட்ட திண்டுக்கல்.. வைய வைய வைரக்கல்..’ எனச் சொல்வது போல, திமுகவை எந்த அளவுக்குத் திட்டுகிறாரோ, அந்த அளவுக்கு அரசியலில் ‘வைரம்’ போல பிரகாசிக்க முடியும், என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போலும். கட்சித் தலைமையின் மனம் குளிரும் அளவுக்கு, அந்த அரசியல் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்.

அமைச்சரின் லேட்டஸ் ட்வீட் இதோ –

 

People are smart .. we have to wait 5 more years! KT Rajendrapalaji's tweet against DMK!


"ஒரு அரசாங்கம் எப்படி நடைபெறும் என்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாததால்தான், தமிழகத்தின் புத்திசாலி மக்கள் உங்களை 10 வருடங்களாக, உங்களை ஆட்சியில் அமர வைக்கவில்லை. இந்தப் பாடம் படிக்காததால், இன்னும் 5 வருடங்கள் நீங்கள் காத்துக்கொண்டுதான் இருக்கப் போகிறீர்கள். #விஷயமறியா_வாரிசு" இப்படி முடிகிறது அந்த ட்வீட்.
 

தமிழக மக்களைப் புத்திசாலி ஆசிரியர்கள் ஆக்கி, யாரைக் குறைகூற நினைக்கிறாரோ, அவர்களைப் பாடம் படிக்காத மாணவர்கள் ஆக்கி, வழக்கம்போல் வம்பிழுத்திருக்கிறார்.

இந்த ட்வீட் குறித்து  கருத்து தெரிவித்த ஒரு அரசியல் நோக்கர் -

“கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு அரசியல் வரலாறு தெரியாமல் இருக்காது.  1967-இல் காங்கிரஸை வீழ்த்திய தி.மு.க., அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரை முதலமைச்சர்கள் ஆக்கி, 21 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. 1996-2001 மற்றும் 2006-2011 என, 10 ஆண்டுகள் அ.தி.மு.க.-வை வீழ்த்தி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடத்தியிருக்கிறது. அப்போதும், தமிழகத்தின் புத்திசாலி மக்கள்தான், இந்த வாய்ப்பை தி.மு.க.-வுக்கு வழங்கினார்கள். தோல்வி கண்ட அந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. பாடம் கற்ற பிறகே, 2011-இல் இருந்து இன்றுவரை (2020) ஆட்சியில் தொடர முடிகிறது. இந்தக் கணக்கு சரியென்றால், தி.மு.க.-வும் 10 ஆண்டுகள் பாடம் கற்று வருவதாகக் கூறுவதில், தவறேதும் இல்லை. அந்தப் பாடத்தை, தி.மு.க. சரியாகக் கற்றுக்கொண்டதா, இல்லையா? என்பது, புத்திசாலி தமிழக மக்களால், 2021-இல் தெரிந்துவிடப் போகிறது.  முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் தமிழக மக்களின் கைகளில் இருக்கும்போது, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏன் முந்திக்கொண்டு, தி.மு.க.வுக்கு ‘ஃபெயில் மார்க்’ போடுகிறார்?” என்று கேட்டார்.  

வரலாறு முக்கியம் அமைச்சரே!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.