publive-image

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், ஆய்வுப் பணிகளுக்காகவும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இவர்களுடன் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் கே. கோபால், மகளிர் மேம்பாட்டு ஆணையர் பல்லவி பல்தேவ், மாவட்ட ஆட்சியர் மோகன், எம்எல்ஏக்கள் விழுப்புரம் லட்சுமணன், விக்கிரவாண்டி புகழேந்தி மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்படி காணை ஒன்றியம் கஞ்சனூர் கிராமத்தில் 14.8 லட்சம் மதிப்பில் தானிய சேமிப்புக் கிடங்கு அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டினர்.

Advertisment

அமைச்சர் பெரியகருப்பன், அமைச்சர் பொன்முடிஇருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெ.ஜெ. பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தற்போது அது கலைக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் போவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரிகை, ஊடகத்தினர் அமைச்சர் பொன்முடியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அதிமுக ஆட்சியில் ஜெ.ஜெ. பல்கலைக்கழகம் என்று பெயரை மட்டும் அறிவித்தார்களே தவிர, வேறு ஒன்றும் செய்யவில்லை. அது தேவையற்றது. எனவே சிதம்பரம் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது உறுதி. அப்படி இணைப்பதை நான்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வரவேற்றுள்ளனர்” என்று கூறினார்.