/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/m569_0.jpg)
இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து நாட்டு விடுதலைக்காகப் போராடிய 99 வயதான கபூருக்கு, மாதந்தோறும் 17 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்க அரசாணை பிறப்பித்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில், சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த 99 வயது சுதந்திர போராட்ட வீரர் கபூர் பணியாற்றி, நாட்டு விடுதலைக்காகப் போராடியுள்ளார். தனக்கு தியாகிகள் பென்சன் வழங்கக் கோரி, 1997-ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்திருந்தார்.
23 ஆண்டுகளாக தனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பென்ஷன் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, கபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தியாகிகள் பென்ஷன் கோரிய 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக, அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் எனக் கண்டனம் தெரிவித்ததுடன், கபூரின் ஆதார் அட்டை மற்றும்சக சிறைவாசி கண்ணன் என்பவர் அளித்த சான்று ஆகியவற்றின் அடிப்படையில், தியாகிகள் பென்ஷன் வழங்குவது குறித்து முடிவெடுத்து தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேசிய ராணுவத்தினருக்கான தியாகிகள் ஓய்வூதியமாக கபூருக்கு மாதந்தோறும் 17 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக,டிசம்பர் 5- ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மத்திய அரசுத் தரப்பில், அரசாணையுடன் மனுதாரர் சமர்ப்பித்துள்ள ஆவணங்களையும் இணைத்து, தமிழக அரசு புதிதாக விண்ணப்பித்தால், மனுதாரருக்கு மத்திய அரசின் ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால், மத்திய அரசின் முடிவே இறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவற்றைப் பதிவுசெய்த நீதிபதி சுரேஷ்குமார், ‘தமிழக அரசாணையின்படி 30 நாட்களுக்குள் தியாகி கபூருக்கு ஓய்வூதியம் வழங்கி, அதுதொடர்பான அறிக்கையை ஜனவரி 3- வது வாரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கபூரின் ஆவணங்களை மத்திய அரசிற்கும் அனுப்ப வேண்டும். மாநில அரசின் முடிவு திருப்தியளிக்கிறது. மனுதாரருக்கு அரசாணையின்படி நடப்பு மாதத்திலிருந்தே பென்சன் வழங்க வேண்டும். மற்ற தியாகிகளுக்கு பென்சன் தொகை அதிகரிக்கப்படும்போது,மனுதாரருக்கும் அதேபோல் அதிகரித்து வழங்கப்பட வேண்டும். மாநில அளவிலான பரிசீலனைக் குழுவின் முடிவு, தமிழக அரசு எந்த நடைமுறைகளின்படி தியாகிக்கு பென்சன் வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது என்பது உள்ளிட்ட ஆவணங்களை, மத்திய அரசுக்கு ஒரு மாதத்திற்குள் தரவேண்டும். அதைப் பரிசீலித்து, மத்திய அரசு 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.’ என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)