Advertisment

முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்பட்ட பென்னிகுய்க் பிறந்த நாள் ! மனம் நொந்த விவசாயிகள்!!

இன்றைய திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அன்றைய மதுரை மாவட்டம், வானம் பார்த்த பூமியாக வறட்சியின் பிடிகளில் சிக்கியிருந்த கொடுமையான காலம் அது. தண்ணீர் பஞ்சம் எங்கும் தலைவிரித்து ஆடியது, வான்மேகம் உருகி மழை பெய்யாதா என விவசாய நிலங்கள் மருகி தவித்தன. இந்த கொடுமைக்கு முல்லைப் பெரியாறு அணை மூலம் விடை காண பிள்ளையார் சுழி போடப்பட்ட ஆண்டு 1886.

Advertisment

pennycuick birthday function

கிழக்குசீமையை வலப்படுத்தாத வைகை மேற்கில் பாய்ந்து அரபிக்கடலில் வீணாய் கலந்த நிலையில், அதனை தமிழகம் பக்கம் திருப்பி இந்த ஐந்து மாவட்டங்களை வளப்படுத்த திருவாங்கூர் சமஸ்தானத்துடன் ஆங்கில அரசு ஒப்பந்தம் போட்டது. சுதந்திரத்துக்குப்பின் இது தமிழகம், கேரளத்துக்கான ஒப்பந்தமானது. இதுவே முல்லை பெரியாறு அணை அமைய வழிவகுத்தது. ஒப்பந்தம் படி அணையின் நீர்மட்டம் ஆன 155 அடி அளவு நீர் தேக்கினால் எவ்வளவு பரப்பில் நீர் தேங்கியிருக்கிறதோ, அந்த நிலம் தமிழகத்திற்கு 999 ஆண்டுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அதாவது 8 ஆயிரத்து 591 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதி நம் கட்டுப்பாட்டுக்கு வந்தது தேக்கடி பகுதியில் 104 அடியில் போடப்பட்டுள்ள சுரங்கம் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் திருப்பவும் வழிசெய்தது. இதுபோல் இந்த முல்லைப் பெரியாறு ஆற்றில் பல உரிமைகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Advertisment

இப்படி ஐந்து மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர், விவசாயத்தை வளப்படுத்தி, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகத்தான் பென்னிகுய்க் இந்த முல்லை பெரியாறு அணையை கட்டினார். அதனாலேயே இப்பகுதியிலுள்ள மக்கள் அவரை கடவுளாக எண்ணி தங்கள் பிள்ளைகளுக்கும், வர்த்தக நிறுனங்களுக்கும் பென்னிகுய்க் பெயரை வைத்து வருகிறார்கள். அதோடு அவர் பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் திருநாள் என்பதால் அந்தநாளில் பென்னிகுய்க் நினைவாக பொங்கல் வைத்தும் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குய்க் மணிமண்டபத்தை லோயர் கேம்பில் கட்டினார். அதிலிருந்து வருடந்தோறும் பொங்கல் திருநாளில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக திரண்டு மணிமண்டபம் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்த நிலையில் இபிஎஸ் ஓபிஎஸ் அரசு பென்னிக்குய்க் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என சமீபத்தில் அறிவித்தது. அதன் அடிப்படையில் பென்னிகுய்க்கின் 179 வது பிறந்த நாள் விழாவை இந்த ஆண்டு முதல் முறையாக அரசு விழாவாக லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் கொண்டாடினர்.

pennycuick birthday function

முதல் நாளே மாவட்ட நிர்வாகம் சார்பில் பென்னிகுய்க் மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுய்க் சிலையை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து மறுநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் துணை முதல்வர் ஓபிஎஸ் லோயர் கேம்பில் உள்ள பென்னிகுய்க் மணி மண்டபத்துக்கு வந்து மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுய்க் வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், எஸ்.பி.சாய்சரன், ஆகியோரும் பென்னிகுய்க் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன் பின் துணை முதல்வர் ஓ பி எஸ் மற்றும் அதிகாரிகளும் சிறிது நேரத்திலேயே புறப்பட்டு சென்றனர். இப்படி அரை மணிநேரத்திலேயேஅரசு விழா முடிந்ததை கண்டு அப்பகுதியில் இருந்த மக்களும், விவசாயிகளும் நொந்து போய் விட்டனர்.

இது சம்பந்தமாக விவசாய சங்க நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசும்போது, "பென்னிகுய்க் பிறந்தநாளில் அரசு விழா எடுக்கிறேன் என்று இந்த அரசு கூறி பெயரளவில் விழா எடுத்திருக்கிறது. தென் மாவட்ட மக்களின் கடவுளாக விளங்கும் பென்னிகுய்க்கின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்தது பெருமைதான். இருந்தாலும் அந்த அரசு விழாவை முறையாக கொண்டாடவில்லை. அரசு விழா என்றாலே மேடை அமைத்து, அதன்மூலம் அமைச்சரும், அதிகாரிகளும் இந்த தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய பென்னிகுய்க்கின் புகழை சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பெயருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், அதிகாரிகளும் மாலை போட்டுவிட்டு, அதை அரசு விழாவாக சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

இதற்காக முதல் நாளே இந்த மணிமண்டபத்தை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, மறுநாள் காலையில் வழக்கம் போல் இங்கு பொங்கல் வைக்க வரும் பொதுமக்களையும் விவசாய மக்களையும் பொங்கல் வைக்க விடாமல் தடுத்து வெளிய அனுப்பிவிட்டனர். அதன்பின் வந்த துணை முதல்வரும், அதிகாரிகளும் மாலை அணிவித்துவிட்டு போய்விட்டனர். இது அரசு விழாவா? நாங்கள் கூட பொங்கல் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மிகச் சிறப்பாக கொண்டாடுவோம். அதையெல்லாம் அதிகாரிகள் உதறித் தள்ளிவிட்டனர். அப்படி இருந்தும் எங்களை வாழவைக்கும் பென்னிக்காக எப்பொழுதும்போல் மண்டபத்திற்கு வெளியே பொங்கலை வைத்து விட்டு அதன்பின் மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுய்கே படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினோம். இனிவரும் காலங்களிலாவது இந்த விழாவை அரசு மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும்" என்று கூறினார்கள்

இந்த விழாவில் அ.தி.மு.க.,கூடலுார் நகர செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலரும் உடன் இருந்தனர். அதோடு ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், கூடலுார் அனைத்து விவசாயிகள் நலச்சங்கம், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம், முல்லை சாரல் விவசாயிகள் சங்கம், முல்லைப் பெரியாறு பாதுகாப்புக்குழு, ஒக்கலிகர் விவசாயிகள் நலச்சங்கம், கூடலுார் மக்கள் மன்றம், பென்னிகுய்க் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதோடு பென்னிகுய்க் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ops mullai periyaru dam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe