
திருச்சி மாநகரத்தையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்க 46 ஆண்டுகளுக்கு முன்பாக அன்றைய முதலமைச்சர் கலைஞரால் கட்டப்பட்டது திருச்சி காவிரி பாலம். காவிரி ஆற்றுக்கு குறுக்கே அமைந்திருக்கும் பாலத்தில் மாலை நேரங்களில் பொழுது கழிப்பார்கள். இதனால், அந்தப் பாலத்தில் தற்காலிக கடைகள் பல உருவாகின. கடைகளாலும், வேடிக்கைப் பார்க்க மக்கள் கூடுவதாலும் காவிரி பாலம் மாலை நேரங்களில் கூட்ட நெரிசலுடன் காணப்படும்.
தற்போது இந்தப் பாலம், தனது உறுதித் தன்மையை இழந்துவருவதால் பாலத்தின் மீது செல்லும், கனரக வாகனங்கள் மிக பொறுமையாக கடக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என திருச்சி மாநகர காவல்துறை தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இனி யாரும் காவிரி பாலத்தில் நிற்கக்கூடாது. வாகனத்தை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் பாலத்தில் ஆங்காங்கே ‘நோ பார்க்கிங்’ பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.