/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_70.jpg)
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள பாக்கம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் ஏராளம் உள்ளன. இந்தக் காட்டுப் பகுதிகளை வன இலாகாஅதிகாரிகள், ஊழியர்கள் அவ்வப்போது வனத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆய்வு செய்ய வருவது வழக்கம். அதன்படி விழுப்புரம் சரக வனஅலுவலர் பாபு வழிகாட்டுதல் படி, கண்டாச்சிபுரம் வனவர்விவேகரன் இவருடன் பாக்கம் வனக்காப்பாளர் கார்த்திகேயன், வன அலுவலர் ஆறுமுகம், அடுக்கம் வன காவலர் அருண்குமார் ஆகியோர் இணைந்து வனப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மழவந்தாங்கல் வனப்பகுதியில் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இவர்கள் அனைவரும் வனப்பகுதியில் வேட்டையாடிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் ஐயப்பன்(36) என்பவர் காட்டுப்பன்றி ஒன்றினை வேட்டையாடி அதன் இறைச்சியை கூறு போட்டு விற்பனை செய்து வந்ததை கையும் களவுமாக பிடித்தனர்.
இதைத் தொடர்ந்துஅவரிடம்வன அலுவலகம் நடத்திய விசாரணையின்போது, காப்புக்காடு பகுதிக்கு வந்து சட்டவிரோதமாக காட்டுப்பன்றிகளை அவ்வப்போது வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.இதையடுத்து அவரிடம் இருந்த காட்டுப்பன்றி இறைச்சிகளை பறிமுதல் செய்ததோடு, அவருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் பறந்து விரிந்த காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்து வனவிலங்குகளை வேட்டையாடி செல்கின்றனர். சிலர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு வழக்கு, சிறை, அபராதம் என விதிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் வனவிலங்குகளை வேட்டையாடுவது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)