Advertisment

பெகாசஸ்: “உச்ச நீதிமன்றம் கடுமையாகத் தண்டிக்குமென நம்புகிறோம்” - திருமாவளவன்

Pegasus;

“உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள இந்த விசாரணைக் குழு விரைந்து விசாரித்து இந்த இணைய ஆயுதத்தைப் பயன்படுத்தியவர்கள் யாவர் என்பதையும், இனிமேல் அத்தகைய இணைய ஆயுதங்களின் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வழிகள் என்ன என்பதையும் தெரிவிக்கும் என்றும், அத்துடன், மிகவும் ஆபத்தான பெகாசஸ் என்னும் இணைய ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தியோரைக் கடுமையாகத் தண்டிக்குமென்றும் நம்புகிறோம்” என விசிக தலைவர் தொல். திருமாவளவன் பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர், “இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் தயாரிக்கின்ற பெகாசஸ் என்னும் இணைய ஆயுதத்தை இந்திய குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டைப் பற்றி விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் அவர்கள் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளப்பூர்வமாக இதனைப் பாராட்டி வரவேற்கிறோம்.

Advertisment

உலகெங்கும் உள்ள 17 ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட புலனாய்வில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரிக்கும் பெகாசஸ் என்ற இணைய ஆயுதம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலருக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டிருப்பது அம்பலமானது. பெகாசஸ் இணைய ஆயுதத்தின் தாக்குதலுக்கு ஆளான 50 ஆயிரம் தொலைபேசி எண்களின் விவரம் புலனாய்வுக் குழுவுக்குத் தெரியவந்தது. அதில், இந்தியாவைச் சேர்ந்த 300 தொலைபேசி எண்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பட்டியலில் இருந்த தொலைபேசிகளை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் உருவாக்கி இருக்கும் பரிசோதனை செயலியின் மூலமாக சோதித்துப் பார்த்ததில், அவற்றுள் பல தொலைபேசிகள் இணைய ஆயுதத்தின் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது நிரூபணமாகியுள்ளது. இந்தியாவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, மேனாள் தலைமைத் தேர்தல் அதிகாரி, முன்னணி ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரது தொலைபேசி எண்களும் இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த இணைய ஆயுதத்தை ஒன்றிய பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பயன்படுத்தியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்திய ஒன்றிய அரசைக் குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி இந்திய ஒன்றிய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்திய அரசோ ‘இது நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனை. எனவே இது தொடர்பாக எந்தத் தகவலையும் நீதிமன்றத்தில் சொல்ல முடியாது’ எனத் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம் அதுதொடர்பாக விசாரிக்கக் குழு அமைக்க நேரிடும் எனக் கூறியதும், ‘நாங்களே ஒரு குழுவை அமைத்து விசாரிக்கிறோம்’ என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். ஒன்றிய அரசாங்கத் தரப்பின் விளக்கத்தையும், அது குழு அமைக்கிறேன் என்பதையும் ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன்பிறகே இப்போது இந்தக் குழுவை அமைத்திருக்கிறது. இந்தக் குழு என்னென்ன பிரச்சனைகளை ஆய்வு செய்ய வேண்டும், எது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டுதல்களும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தனிமனித அந்தரங்கம் என்பது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதுமட்டுமன்றி தனிமனிதர்களின் தரவுகளைப் பாதுகாப்பதற்கு சட்டம் ஒன்றை இயற்றுமாறும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டது. ஆனால் அந்த சட்டத்தை இதுவரை ஒன்றிய அரசு இயற்றவில்லை.

பெகாசஸ் என்பது உளவு பார்ப்பதற்கான செயலிகளில் ஒன்று அல்ல, அது இணைய ஆயுதம் என்று இஸ்ரேல் அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டது. அதை முறையான அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். தனிமனிதர்களுக்கோ நிறுவனங்களுக்கோ விற்க முடியாது. இஸ்ரேல் ராணுவ அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் என்.எஸ்.ஓ நிறுவனம் அதை எந்தவொரு அரசாங்கத்துக்கும் விற்கக் கூடாது என்ற நிபந்தனைகளை இஸ்ரேல் நாட்டு அரசு விதித்துள்ளது.

பெகாசஸ் இணைய ஆயுதத்தை இந்தியாவில் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தியுள்ளனர். 4அந்த இணைய ஆயுதத்தின் தாக்குதலுக்கு ஆளானவர்களின் விவரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட தருணம் ஆகியவற்றைப் பார்க்கும்போது ஒன்றிய பாஜக அரசுதான் அதைச் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. ‘நாங்கள் இந்த பெகாசஸ் இணைய ஆயுதத்தை வாங்கவில்லை’ என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தீர்மானமாகத் தெரிவிக்காததால் ஒன்றிய அரசின்மீதான சந்தேகம் வலுவடைகிறது. எனவேதான் இப்போது உச்ச நீதிமன்றம் இந்த விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள இந்த விசாரணைக் குழு விரைந்து விசாரித்து, இந்த இணைய ஆயுதத்தைப் பயன்படுத்தியவர்கள் யாவர் என்பதையும், இனிமேல் அத்தகைய இணைய ஆயுதங்களின் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வழிகள் என்ன என்பதையும் தெரிவிக்கும் என்றும், அத்துடன், மிகவும் ஆபத்தான பெகாசஸ் என்னும் இணைய ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தியோரைக் கடுமையாகத் தண்டிக்குமென்றும் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Pegasus Spyware Supreme Court Thirumavalavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe