Skip to main content

தகவல் அறியும் சட்டத்தில் காவிரி குறித்த கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளிப்பதா? -பெ. மணியரசன் கண்டனம்!! 

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

PE MANIYARASAN STATEMENT

 

தகவல் அறியும் சட்டத்தில் காவிரி குறித்த கேள்விகளுக்கு இந்தியில் மத்திய அரசு பதிலளித்ததற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப் பட்டிருக்கின்றனவா என்று அறிந்து கொள்ளவும், நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ளவும், நடுவண் அரசின் நீராற்றல் துறைக்கு, கடந்த 16.07.2020 அன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 8 வினாக்கள் கொண்ட கடிதம் புதுதில்லிக்கு அனுப்பி இருந்தேன்.

அதற்கு விடையளித்து நீராற்றல் துறையிலிருந்து வந்த இரண்டு கடிதங்கள், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே உள்ளன.

தமிழ்நாட்டில் இந்தி மொழி - கல்வி மொழியோ அல்லது மாநில அலுவல் மொழியோ அல்ல! தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 343 ( 2 )-இன்படி இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்கிறது. உறுப்பு 343 ( 3 )-இன்கீழ் 1963இல் இயற்றப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, ஆங்கிலம் நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே தொடர்ந்து தொடர்பு மொழியாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் மாநில அரசின் அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் இருக்கின்றன.

சட்டங்கள் இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, முழுக்க முழுக்க இந்தியில் விடை அளிப்பது சட்ட விரோதச் செயல்! அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்திய அலுவல் மொழிச் சட்டம், தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் ஆகிய மூன்றுக்கும் எதிரான செயல்!

தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 25 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீராகவும் மக்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும் காவிரி நீர் கர்நாடகத்திலிருந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வருகிறதா என்று அறிந்து கொள்வதற்கும், 2018இல் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு செயல் படுகின்றவா எனத் தெரிந்து கொள்வதற்கும், கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் அக்கறை கொண்டு கவலையோடு நான் கேட்ட கேள்விகளுக்கு – எனக்குத் தெரியாத மொழி மட்டுமின்றி – ஒற்றை ஆட்சிமொழியாக எந்தச் சட்டத்தின் கீழும் இல்லாத இந்தி மொழியில் நடுவண் அரசின் நீராற்றல் துறை விடையளித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயல்!

 

Ad


காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், தனக்கு சொந்தமாக அலுவலகம் கொண்டிருக்கிறதா, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், இப்பணியில் முழுநேர அதிகாரியாக இருக்கிறாரா அல்லது வேறொரு பணியில் இருந்து கொண்டு, கூடுதலாக இப்பொறுப்பில் இருக்கிறாரா, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு அமர்த்தப்பட்ட முழுநேர அதிகாரிகள் எத்தனை பேர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரையறுத்த அளவின்படி நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளதா என்பவை உள்ளிட்ட 8 கேள்விகள் கேட்டிருந்தேன்.

இவற்றில் சிலவற்றிற்கு நீராற்றல் துறையின் புதுதில்லி தலைமையகமும், பெங்களுருவில் உள்ள அதன் தென்னகக் கண்காணிப்பகமும் எனக்கு அளித்த பதில் கடிதங்கள் முழுக்க முழுக்க இந்தியில் இருக்கின்றன (அவற்றின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்). இதுகுறித்த எதிர்ப்புக் கடிதத்தை நடுவண் நீராற்றல் துறைக்கு அனுப்பியுள்ளேன்.

இதுபோல், தொடர்ந்து நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணித்துக் கொண்டுள்ளது. அண்மையில், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நடத்திய யோகா காணொலி பயிலரங்கில், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே தில்லியிலிருந்து பேசினார்கள். தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்ட மருத்துவர்கள், தங்களுக்கு இந்தி தெரியாது ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கூறியபோது, அத்துறையின் செயலாளர், “இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள்!” என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், வானூர்தி நிலையத்தில் நடுவண் தொழிற்சாலை காவல்படை அதிகாரியிடம் ஆங்கிலத்தில் ஒரு விவரம் கேட்டபோது, அவர் இந்தியில் விடையளித்திருக்கிறார். கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதற்கு, “இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?” என எதிர்வினா கேட்டுள்ளார்.

 

Nakkheeran


இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் அல்ல – தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தாக்கும் செயல்கள்! தமிழை நீக்கி விட்டு – இந்தியையும் சமற்கிருதத்தையும் கொண்டு வந்து நிலைநாட்ட வேண்டும் என்ற மோடி அரசின் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதி என்றே கருத வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு, யாருக்கோ ஏற்பட்ட பாதிப்பு என்று எண்ணாமல், தனது மக்களுக்கும், மொழிக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து என்பதை உணர்ந்து, தில்லி அரசிடம் உரியவாறு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் தமிழ், புதுதில்லியுடன் செய்தித்தொடர்புக்கு ஆங்கிலம் என்ற சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Date Notification for Cauvery Management Commission Meeting

கடந்த ஜனவரி 18 ஆம் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதத்தில் வினாடிக்கு ஆயிரத்து 182 கன அடி வீதம் 2.76 டிம்சி தண்ணீரும், பிப்ரவரி மாதத்திற்கு 998 கன அடி வீதம் மொத்தமாக 5.26 டிஎம்சி நீர் கார்நாடக அரசின் சார்பில் திறக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்திற்குப் பிறகு வரும் 1 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

இந்தி மொழி பற்றிய கேள்வி; கோபமாய் பதிலளித்த விஜய் சேதுபதி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vijay sethupathy about hindi imposition

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.

ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.

அப்போது விஜய் சேதுபதியிடம், ‘75 வருடமாக இங்கு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இந்தி படிக்க வேண்டுமா வேண்டாமா..’ என்ற கேள்வியை ஒருவர் முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “இது மாதிரியான கேள்வியை அமீர்கான் வந்தபோதும் கேட்டீர்கள். எல்லா சமயத்திலும் கேட்கிறீர்கள். எதற்கு அந்த கேள்வி. என்னை போன்ற ஆட்களிடம் இந்த கேள்வி கேட்டு என்னவாகப் போகுது. இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கு. கேள்வியே தப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் அது தேவையில்லாத கேள்வி. இந்தியை யாரும் இங்க தடுக்கவில்லை. எல்லாரும் படித்துக்கொண்டு தான் வருகிறார்கள். அதற்கான விளக்கம் பி.டி.ஆர் ஒரு இடத்தில் கொடுத்திருப்பார். அதை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்” என சற்று கோபமாகச் சொன்னார்.