பழனி கோவிலுக்கு வந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!-தமிழக டிஜிபிக்கு சென்ற புகார்!

pazhani incident... Complaint to the Tamil Nadu DGP!

பழனி முருகன் கோவிலுக்கு கணவனுடன் வந்த பெண்ணை தங்கும் விடுதியில் அழைத்துச் சென்று சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது.இதுதொடர்பாக புகார் வாங்க பழனி காவல்துறையினர் மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு கேரள டிஜிபி அனில்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரதுஉடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் மருத்துவர்களிடம் அந்த பெண் தான் பழனி கோவிலுக்கு சென்ற பொழுது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் என் கணவரை தாக்கிவிட்டு தங்கும் விடுதிக்கு என்னை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ந்த மருத்துவர்கள் கண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 19ஆம் தேதி பழனி முருகன் கோவிலுக்கு கணவருடன் சென்றபோது கணவரை அடித்து விரட்டிவிட்டு தன்னை தங்கும் விடுதிக்கு கடத்திச் சென்றதாகவும், பின்னர் மூன்று பேர் கொண்ட கும்பல் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கண்ணீருடன் அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த சம்பவத்தன்று இது தொடர்பாக பழனி அடிவாரத்தில் உள்ள காவல் துறையிடம் புகார் அளிக்க முயன்றபோது அவர்கள் அதை வாங்க மறுத்து விட்டனர் என்றும், வேறு வழியின்றி சொந்த ஊருக்குத் திரும்பி விட்டதாகவும் அந்தப் பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி காவல் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து அறிந்த கேரள டிஜிபி அனில்குமார் பழனி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பழனி காவல்துறையிடம் கேட்டபோது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என மறுத்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த தேதியில் பணியில் இருந்த காவல்துறையினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

pazhani police
இதையும் படியுங்கள்
Subscribe