Skip to main content

எதையாவது விற்றாவது பணத்தை கட்டியாக வேண்டும்: பெண்களை மன்றாடவைக்கும் நிதி நிறுவனங்கள்.!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

sold anything and paid interest; Financial institutions that make women beg

 

கரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாகப் பரவிவருவதால் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் கரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால்ஈ ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்துவருகிறது. பொது முடக்கத்தால் கூலித்தொழிலாளர்கள், அன்றாட வேலைக்கு செல்வோர் ஆகியோர் வருவாய் இன்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வருவாய் இல்லாததால் குடும்பத்தை நடத்தவே சிரமப்படுகின்றனர்.

 

இதனால் மகளிர் குழு நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பெற்ற கடன் தொகையைக் கட்ட முடியாமல் பெண்கள் அவதிப்பட்டுவருகின்றனர். ஆனால் கடன் வசூல் செய்யும் ஊழியர்கள், கடன் தொகையை கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். கடன் பெற்ற பெண்கள் ‘எங்களுக்கு வேலை இல்லை, வருவாய் இல்லை, குடும்பத்தை நடத்தவே கஷ்டமாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் எங்களால் எப்படி பணம் கட்ட இயலும்?’ என்று மன்றாடி கேட்கின்றனர். ஆனால் ஊழியர்களோ, ‘எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. எதை விற்றாவது எங்களுக்குப் பணத்தைக் கட்டியே ஆக வேண்டும்’ என்று தவணை தொகையைக் கட்டச் சொல்லி வற்புறுத்துவதுடன், பெண்களை ஆபாசமான  வார்த்தைகளால் திட்டுவதாக பல்வேறு மகளிர் குழு பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளில் பெண்கள் தனியார் நிதி நிறுவனங்களில் 25,000 - 30,000 முதல் ஒரு லட்சம்வரை கடன்பெற்று வாராவாரம், மாத தவணைகளில் பணத்தைத் திரும்பச் செலுத்திவருகின்றனர். ஊரடங்கு காரணமாக பணத்தைத் திரும்பச் செலுத்த முடியவில்லை என்று பெண்கள் கூறும்போது, கட்டாயப்படுத்தி பணத்தைக் கட்டியே ஆக வேண்டும் என்று நிதி நிறுவன ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில், கணவர் நோய்த்தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது மனைவியிடம் பணத்தைக் கேட்டு நிதி நிறுவன ஊழியர்கள் நிர்ப்பந்தப்படுத்துகின்றனர். 

 

எனவே தமிழக அரசு, தினக் கூலிகள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் வாழ்வாதார சிக்கலைக் கருத்தில் கொண்டு, பொதுமுடக்க காலத்தில் மக்களின் துயரத்தை உணர்ந்து, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை கடன் தொகையைக் கட்டாயப்படுத்தி வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், பொது முடக்க காலத்திற்கான கால அவகாசம் வழங்கி வசூலிக்க உத்தரவிட வேண்டும். இதனை மீறி கட்டாய வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும்  மகளிர் குழு பெண்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்