“உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகன்” - பவன் கல்யாண் பேச்சு!

Pawan Kalyan says Murugan is the world  first puratchi thalaivar

மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு இன்று (22.06.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “முருகனின் தந்தை சிவபெருமான் முதல் சங்கத்துக்கு தலைமை ஏற்று மதுரையில் தான் இருந்தார். எனவே இந்த மதுரையில் தாயும் இருக்கிறார். தந்தையும் இருக்கிறார். மகனும் இருக்கிறார். அப்படி என்றால் மதுரை மக்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த புண்ணியத்தின் விளைவாகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவதரித்தார்.

தென் தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகனின் அவதாரமாகக் கருதப்படுகிறார். அவர் சிலைக்கு அருகே மயிலும் வைக்கப்பட்டுள்ளது. தேவர் மூலம் மனித உருவில் முருகன் வாழ்ந்தார். அந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரைத் தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன். இப்போது மதுரையில் நடத்த ஒரு நிகழ்வைச் சொல்லப் போகிறேன். இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போகிறோம். அருளைப் பெறப் போகிறோம். குங்குமம் பெறுகிறோம்.பிரசாதம் கிடைக்கிறது. ஆனால் இந்த தலைமுறைக்குத் தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்லப்போகிறேன். ஒரு காலத்தில் மதுரையே இருண்டு கிடந்தது. நமக்கு ஒளி கொடுக்கும் மீனாட்சி அம்மன் கோயிலில் ஒளி இல்லை.

நமக்கு சிந்தூர் (குங்குமம்) கொடுக்கும் மீனாட்சி அம்மன் கோயிலில் சிந்தூர் கொடுக்க ஆளில்லை. எந்த ஒளிப்பாடும் இல்லை. கோயில் நொறுங்கிப் போயிருந்தது. ஏன் தெரியுமா? 14ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் மதுரையை மாலுகபூர் லூட் பண்ணினார். அதன் பிறகு 60 வருஷங்களுக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் விளக்கு இல்லை. மீனாட்சி அம்மன் கோயில் மூடப்பட்டிருந்தது. அது மதுரையின் இருண்ட காலம். 14ஆம் நூற்றாண்டின் முடிவில் மதுரையில் மீண்டும் ஒளி பிறந்தது. அந்த ஒளிவிளக்கை ஏற்றி வைத்தார் விஜயநகர இளவரசர் குமார கம்பன். இதிலிருந்து என்ன தெரிந்தது?. நமது நாட்டு நம்பிக்கைக்கு அழிவில்லை. அதை யாராலும் அழிக்க முடியாது. நமது கலாச்சாரம் ரொம்ப ஆழமானது. நம்மை அசைக்க யாராலும் முடியாது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக இருந்தது.

அது இன்றும் ஆழமாக இருக்கிறது. இனியும் ஆழமாக இருக்கும். இதுதான் இந்த தெய்வீக பூமியின் பலம். முருகனின் வடிவத்தில் நமது அறம் தொடர்ந்து தழைக்கிறது. அறம் என்பது என்ன?. உலகைத் தீமை சூழும் போது அதை அறுப்பது அறம். எல்லோரையும் சமமாகப் பார்ப்பது அறம். தீயவர்களை வதம் செய்வது அறம். அதன் பெயரே புரட்சி. அது செய்பவரே புரட்சித் தலைவர். எனவே உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன் பெருமாள். நம்ம எல்லோரும் இங்கு வந்தது ஒரே ஒரு கடவுளுக்காகப் புரட்சித்தலைவர் முருகப் பெருமானுக்காக. உலகின் முதல் புரட்சித் தலைவருக்காக அநீதியை அழித்ததால் அவர் புரட்சித் தலைவர். சமமாக நடத்தியதால் அவர் புரட்சித் தலைவர்” எனப் பேசினார்.

HINDU MUNNANI madurai pawan kalyan
இதையும் படியுங்கள்
Subscribe