Patta is here where is house

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நகரில் உள்ள ஒதுக்குப்புறமானஇடத்தில்,சிமெண்ட் சீட்டுகளைக் கொண்டு தடுக்கப்பட்ட சிறு சிறு பகுதிகளில், இட நெருக்கடியில் வாழ்ந்து வருகிறார்கள் நரிக்குறவர் இன மக்கள். இவர்களோடு வயதானவர்கள், புதிதாக திருமணமானவர்கள், சிறு குழந்தைகள் இப்படி அனைவரும் ஒரே அறையில் சமைப்பது, சாப்பிடுவது, படுப்பது என வசித்து வருகின்றனர். இப்படிதாங்கள் நெருக்கடியில் வாழும் அவல நிலை குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் சென்று தங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டி மனு அளித்திருந்தனர்.

Advertisment

அதனடிப்படையில், கடந்த 2016 -ஆம் ஆண்டில் 52 நபர்களுக்கு ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள தேத்தாம்பட்டு ஊராட்சி கல்லுமேடு பகுதியில், வீட்டு மனைப் பட்டா வருவாய்த்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. இவர்களோடு சேர்த்து பூம்பூம்மாடு வைத்துக் கொண்டு குறிசொல்லும் குடுகுடுப்பைக்காரர்களுக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பட்டா வழங்கிய இடம் சமமான பகுதியாக இல்லாமல் இருந்துள்ளது. அதை நரிக்குறவர் இன மக்களும் குடுகுடுப்பைக்கார மக்களும் சேர்ந்து அந்த இடத்தைச் சமன் செய்தனர்.

Advertisment

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன மக்களும் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வேண்டி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதையடுத்து வருவாய்த்துறை மூலம் சில இடங்களில் வீட்டுமனைப்பட்டா அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. பின்னர் அரைகுறையாக அந்தப் பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டனர். அளவீடு செய்து நடப்பட்ட கற்கள், மர்ம நபர்களால் பிடுங்கி எறியப்பட்டுள்ளது. கடந்த 2016 -ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட பட்டாவிற்கு, முறையாக அளவீடு செய்து பயனாளிகளுக்கானஇடத்தை ஒதுக்கவில்லை.அதேபோல், யார் யாருக்கு எந்த இடம் என்றும் அடையாளம் காட்டவில்லை.இதனால், வெறும் பட்டா பேப்பரை மட்டும் கையில் வைத்துக்கொண்டு "பட்டா இங்கே, எங்க இடம் எங்கே?" என்று கூக்குரல் எழுப்பி கேள்விக் கேட்கிறார்கள் நரிக்குறவர் இன மக்கள்.

இதுகுறித்து அவர்கள் நம்மிடம் கூறும்போது, "பட்டா கொடுத்த அதிகாரிகளிடம் நிலத்தை அளந்து எங்களுக்கு அடையாளம் காட்டுமாறு பல்வேறு முறை நேரிலும், மனுகொடுத்தும் முறையிட்டு பார்த்தோம். அனால்,எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. எனவே, வெறும் பட்டா சிட்டா வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம். விரைவில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அந்தப் பட்டா சீட்டை ஒப்படைக்கப் போவதாக நரிக்குறவர் இனமக்கள் தெரிவிக்கின்றனர்." பட்டா சீட்டு இங்கே வீட்டுமனை எங்கே?எனும் மக்களின் கேள்விக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் என்ன பதில் கூறப் போகிறார்கள்.