
டவுன் சர்வே ஆவணத்தில் பட்டா மாற்றப்பட்டதால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் ஒரு பகுதிவாசிகள்.
சங்கரன்கோவில் பகுதியில் உள்ள காந்தி நகர், கக்கன் நகர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலம் காலமாக வசித்து வருகின்றனர். அந்த மக்கள் அந்தப் பகுதியில் உள்ள நெல் களத்தை விவசாயப் பணிகளுக்காக பலகாலமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலத்தை அரசு தரப்பில் கையகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகத் தெரிந்ததுடன், அதற்காகவே ‘களம்’ என்றிருக்கும் நிலத்தை கழிப்பிடம் என்று டவுன் சர்வே ரிப்போர்ட்டான டி.எஸ்.ஆர். படி பட்டா மாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
அதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நகரின் தேரடித் திடலில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அந்தப் பகுதி மக்கள் அறிவித்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தேரடி திடலில் உண்ணாவிரதமிருக்க போராட்டத்தில் ஈடுபட பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது போலீஸ் நிர்வாகம். ஆனாலும் தடையை மீறி நேற்று மைதானத்தில் கக்கன் நகர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 14 ஊர் நாட்டாமைகள் தலைமையில் ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். இதனால், பதற்றம் மற்றும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தகவல் போய் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமாரும் ஸ்பாட்டுக்கு முன்னதாக வர, அவர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொந்தளிப்பான நிலையில் கழுகுமலை சாலையிலிருந்து நெல்லை சாலையை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். சிறிது தூரத்திற்குப் பின்பு பழைய தாலுகா அலுவலகம் முன்னே போலீசார் அந்த மக்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த மக்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்ய, போலீசுக்கும் பொதுமக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கழுகுமலை, நெல்லை பிரதான சாலைகள் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் காரணமாக மூடப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆத்திரமான மக்கள் தடுப்புகளை மீறித் தேரடித் திடலுக்குச் சென்றவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேசக் குரலெழுப்பினர்.
காலை 10 மணிக்கு ஆரம்பித்த மக்களின் மறியல் போராட்டம் மதியம் இரண்டு மணி வரை நீடித்தது. சுமார் மூன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே மக்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் பதற்றம் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.