திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாதாள செம்பு முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குத் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்து பாதாள செம்பு முருகனைத் தரிசித்து விட்டுச் செல்கிறார்கள். இப்படித் தரிசித்து விட்டுச் செல்லும் முருக பக்தர்கள் அங்குள்ள கருங்காலி மாலையை வாங்கி அணிந்தும் செல்கிறார்கள்.
இந்த பாதாள செம்பு முருகன் கோவிலின் அறக்கட்டளையின் சார்பில் காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளிகள் மற்றும் ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இராஜாபுதூர் இராதாசாமி நடுநிலைப்பள்ளி, கோட்டப்பட்டி அரசு பள்ளி, இராமலிங்கம்பட்டி அரசு பள்ளி, கட்ட சின்னாம்பட்டி, எல்லப்பட்டி, கோட்டையூர், மெய்ஞானபுரம், எர்ரணாம்பட்டி சமத்துவபுரம், தம்மன்னம்பட்டி ஆகிய ஊர்களைச் சார்ந்த மற்ற அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும் பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக நோட்டுகள், புத்தகங்கள், ஹீரோ பேனாக்கள் பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை அறங்காவலர் சேது பாலகிருஷ்ணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஊர் முக்கியஸ்தர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். மாணவ மாணவியருக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள நோட்டு மற்றும் புத்தகங்கள், பேனாக்கள் வழங்கப்பட்டது. ஏற்கனவே பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பில் விளையாட்டுத்துறையில் உள்ள மாணவ - மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிதி உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
அதுபோல் கொரோனா காலங்களில் பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பில் நிதி உதவிகளும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் வழங்கப்பட்டது. அதேபோல் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல லட்சம் பெறுமான உணவுப் பொருட்களும், பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.