
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இன்று ரெய்டு நடைபெற்றது. ஆனால் அவர் மீதான தற்போதைய நடவடிக்கைகளுக்கான தொடக்கப் புள்ளி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்டுவிட்டது. எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1- ஆம் தேதி அன்று தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் துறையில் ஒப்பந்தங்கள் முறைகேடாக தரப்படுவதாகவும், இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் காரணம் எனவும் கூறியிருந்தார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதைத் தவிர, கடந்த 2018- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23- ஆம் தேதி அன்று எஸ்.பி.வேலுமணி மீது ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சி.பி.ஐ.யிடமும், லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் அறப்போர் இயக்கம் மனு அளித்தது.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணையைத் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த 2019- ஆம் ஆண்டு அக்டோபர் 18- ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கைத் திருப்தி தரவில்லை என்றும், விசாரணையில் 10 மாதங்களாக முன்னேற்றம் இல்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதியன்று தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் தாக்கல் செய்த மனுவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் மேற்கொண்டு நடவடிக்கைகளைக் கைவிட முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், வேலுமணி மீதான நடவடிக்கையைக் கைவிட எந்த அடிப்படையில் முடிவெடுத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பி, அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.
இந்த சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு அமைந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது. உள்ளாட்சித்துறையில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தித் தேவைப்பட்டால் வழக்குப் பதியப்படும் எனவும் கடந்த ஜூலை மாதம் 19- ஆம் தேதி அன்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கைக்கு 8 வாரம் அவகாசமும் கேட்கப்பட்டது. அதேநேரம் கணக்கு தணிக்கைத்துறை அறிக்கை குறித்து விளக்கம் தர எஸ்.பி.வேலுமணி தரப்பும் அவகாசம் கேட்டது. இரு தரப்புக்கும் அவகாசம் அளித்த நீதிமன்றம், புகார்களின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தியது.
இந்த பின்னணியில் தான் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையும் நடைபெற்றுள்ளது.