Passengers stranded in Kalampakkam - Protest breaks out at midnight

சென்னை கிளம்பாக்கத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் அவதிப்படுவதாக நள்ளிரவில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையை ஒட்டி கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல நேற்று இரவு பேருந்துகள் இல்லை என சுமார் 500க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக திருச்சி, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி என பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இரவு 9 மணிக்கு பிறகு பேருந்துகள் இல்லை எனவும் இது தொடர்பாக அங்குள்ள போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதிலளிக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த பயணிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்புகளைப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த கூடுவாஞ்சேரி சரக உதவியாளர் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.