
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தை சார்ந்த அரசு பேருந்து நேற்று முன்தினம் (05.12.2024) இரவு 8.15 மணி அளவில் சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டது. இப்பேருந்தில் ஏறிய சந்துரு என்பவர் கடலூர் செல்ல பயண சீட்டு எடுத்துள்ளார். அவர் தான் கொண்டு வந்த லேப்டாப் பையை இருக்கைக்கு மேல் உள்ள சுமை வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு, வலது பக்க கடைசி இருக்கையில் அமர்ந்துள்ளார். தூங்கிக் கொண்டே பயணித்த சந்துரு கடலூர் பேருந்து நிலையம் வந்ததும் தூக்க கலக்கத்தில் தான் கொண்டு வந்த லேப்டாப் பையை மறந்து விட்டு பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டிற்கு போய் சேர்ந்த பிறகு குடும்பத்தினர் போகும் போது கொண்டு போன லேப்டாப் பை எங்கே என்று கேட்டுள்ளனர்.
அதன் பிறகுதான் சந்துருவுக்கு பேருந்தில் லேப்டாப் பையை வைத்துவிட்டு வந்தது ஞாபகம் வந்துள்ளது. உடனடியாக புதுச்சேரியில் உள்ள தனது நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு. அவர்களிடம் விவரத்தைக் கூறி, பேருந்தின் அடையாளத்தையும் குறிப்பிட்டு, பேருந்து புதுச்சேரி வந்ததும் அதில் ஏறி லேப்டாப் பையை எடுத்து வைங்க என்று கூறியுள்ளார். மேலும் பயணச்சீட்டில் இருந்த பேருந்து எண்ணையும் தனது நண்பர்களிடம் கொடுத்து இருக்கிறார். அதன்படி அவரது நண்பர்களும் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் வந்து காத்திருந்துள்ளனர். ஆனால் அப்பேருந்து புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றதை சரியாக கவனிக்காததால் பேருந்து சென்று விட்டதாக சந்துருவிடம் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
அப்போது சந்துரு என்ன செய்வது என்று தெரியாமல் தனது நண்பர் ஒருவர் மூலம் நள்ளிரவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை தொடர்பு கொண்டுள்ளார். ‘அந்த லேப்டாப்பில் தான் எனது வேலை தொடர்பான முக்கிய தகவல்கள் இருக்கிறது. வாழ்வே அதில் தான் இருக்கிறது. தூக்கத்தில் மறந்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி விட்டது என் தவறுதான். எப்படியாவது அதை கண்டுபிடித்து கொடுங்க சார்’ என்று உருக்கமாக கோரிக்கை வைத்திருக்கிறார். இதனைக் கேட்ட அமைச்சர் சிவசங்கர் உடனடியாக விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநரை தொடர்பு கொண்டு, ‘கடலூரில் இருந்து நேற்று முன்தினம் (05.12.2024) இரவு புறப்பட்ட பேருந்தில் இளைஞர் ஒருவர் லேப்டாப்பை தவறவிட்டுள்ளார். அது எந்த பேருந்து என்று விசாரித்து, லேப்டாப் பையை பத்திரமாக எடுத்து வைக்க சொல்லுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சந்துரு பயணித்த பேருந்து எது என்றும் அதில் பணி மேற்கொண்ட நடத்துநர் யார் என்றும் விசாரித்து 20 நிமிடத்தில் லேப்டாப் பை கிடைத்துவிட்டதாக அமைச்சர் சிவசங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த லேப்டாப் பையை கடலூர் வழியாக செல்லும் பேருந்தில் கொடுத்து அனுப்பி சந்துருவிடம் பயணியிடம் ஒப்படையுங்கள் அமைச்சர் சிவசங்கர் கூற, அதன்படி நேற்று (06.12.2024) காலை 07.00 மணி அளவில் கடலூர் சென்ற பேருந்தில் லேப்டாப் பை எடுத்த செல்லப்பட்டு சந்துருவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சந்துரு, தனது லேப்டாப் பை கிடைக்க அமைச்சர்.சிவசங்கருக்கும், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.