
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (92) சென்னையில் காலமானார்.
பாசமலர், பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள தாஸ் என்ற பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். திரையுலகில் மார்க்கெட்டில் இருக்கும் நடிகருக்கென்று தனிபாணி கொள்ளாமல், தன்னையும் முன்னிறுத்திக்கொள்ளாமல், கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்.
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3 அன்று 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2022-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்விருதுஆரூர்தாஸ்க்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கே நேரடியாக சென்று அவருக்கு விருதினை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us