
என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த 26, 27 ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக விவசாயி முருகன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அறுவடை செய்யும் வரை விவசாயிகளுக்குத் தொல்லை தரக் கூடாது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தவில்லை என்பதால் மீண்டும் விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கில், தமிழக அரசு வாதங்களை வைத்தது. அதில், 'இவ்வளவு பெரிய போராட்டமாக மாறுவதற்கு அரசியல் கட்சியினரின் தூண்டுதல் தான் காரணம். ஒரு பகுதியில் நிலத்திற்கு இழப்பீடு பெரும் மனுதாரர் மற்றொரு பகுதியில் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்' என்ற வாதத்தை வைத்தது. அப்பொழுது வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன், அரசியல் செய்வதற்காகத்தான் கட்சிகள் உள்ளன. கட்சிகளை அரசியல் செய்யக்கூடாது என்று கூறுவதுஜனநாயகத்திற்கு எதிரானது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை' எனக் கருத்து தெரிவித்தார்.
நிலம் கொடுத்தவர்களுக்குப் பணி வழங்காமல் வட மாநிலத்தவருக்குப் பணி வழங்கப்படுகிறது என மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதற்கு, பணிகளில் வடமாநிலத்தவர் தென் மாநிலத்தவர் எனப் பிரிக்காதீர்கள் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் சுட்டிக் காட்டினார். தென் மாநிலம், வட மாநிலம் என நாட்டைப் பிரித்துப் பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளிமாநிலங்களுக்குச் சென்று பிரகாசித்து வருகிறார்கள். பயிர்களில் பொக்லைன் விட்டு அழித்துவிட்டு இப்போது பயிர்களேஇல்லை எனச் சொல்வீர்களா? உங்கள் இடத்திற்கு வேலி அமைக்கும் பணியைமுறையாகச் செய்யாமல் பிரச்சனையை உருவாக்கி உள்ளீர்கள்' என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு மற்றும் என்எல்சி ஆகியவை இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நாளை மறுதினத்திற்கு ஒத்தி வைத்த நீதிபதி,மீண்டும் விசாரணைக்கு வரும் பொழுது இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)