
புதுக்கோட்டையில் இன்று சில விழாக்களில் கலந்து கொள்ள வந்த தமீமுன் அன்சாரி எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு முரண்டு பிடிக்காமல் மூன்று மாநிலங்களின் உரிமையை மதிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு ஒத்துழைப்புத் தந்து சக மாநிலங்களுக்கு தண்ணீர் தர முன்வர வேண்டும்.
கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் தொடர்ந்து துரோகம் செய்தால் உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.
பா ஜ க ஆட்சி இறுதி ஆண்டில் உள்ளது. 2019 ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமனறத் தேர்தலில் பாஜகவுடன் தமிழகத்தில் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் எந்த ஒரு பயனும் இல்லை. ஜிஎஸ்டியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் அனைத்திற்கும் 10 சதவீதத்திற்கும் குறைவாக வரி விதிக்க வேண்டும். பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைத்து விலையை குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.