/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_268.jpg)
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத்தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நாடாளுமன்றத்தேர்தலில்சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன்.இந்தத்தேர்தலில் கட்சிக்கு கூடுதல் இடம் கேட்டு தேர்தலில் நிற்கப் போகிறேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நிரவல் காரணமாகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் இதனால் மிகவும் குறைக்கப்பட்டு தற்போது 5 சதவீதம் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதனால் எஸ்சி, எஸ்டி அல்லாதவர்கள் பணியாற்றும் பல்கலைக்கழகமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சமூகநீதி கருத்தியலுக்கு எதிராக அமையும். இட ஒதுக்கீட்டின்படி இந்த பல்கலைக்கழகத்தில் எஸ்.சி, எஸ்.டி பணியாளர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 17 ஆம் தேதி சிதம்பரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் கலந்து கொள்கிறார். அதேபோல் தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி காலிப் பணியிடங்களை அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை நடைப்பயணத்தில் அதிமுக, பாமகவினர் பெரும்பாலும் கலந்து கொள்கிறார்கள். இதில் பாஜகவினர் சொற்ப அளவிலே உள்ளனர். இப்படியே போனால் அதிமுகவையும் பாமகவையும் பாஜக விழுங்கிவிடும். இதற்கு நாட்டில் பல உதாரணங்கள் உள்ளது. பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது.இந்து மதத்தை எதிர்க்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மின் மீட்டரை பொருத்த தடை விதிக்க வேண்டும். இதனால் ஏழை எளிய மக்கள், நெசவாளர்கள், விவசாயிகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இலவச மின்சாரம் கிடைக்காது. எனவே தமிழக அரசு மின்மீட்டரை வைக்க அனுமதிக்கக் கூடாது.
மோடி ஏழை மக்களை ஏமாளி என நினைத்துக்கொண்டு நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கூறி வருகிறார். இது முற்றிலும் தவறானது. ஏழை மக்கள் வரும் நாடாளுமன்றத்தில் இதற்கு பதில் அளிப்பார்கள்.சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தமிழக அரசு அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார். இவருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பால அறவாழி மற்றும் செல்லப்பன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)