‘பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்’ -ஈ.ஆர்.ஈஸ்வரன்

‘Part-time teachers should be made permanent’ - E.R.Eswaran

அரசு பள்ளியில் பகுதிநேர ஆசிரியர்களாக பணி செய்பவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீர்த்து பாடம் நடத்துவதற்காக பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். பல நேரங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நம்பி முழுமையாகவே அரசு பள்ளிகள் நடந்த காலங்களும் உண்டு. பகுதிநேர ஆசிரியர்கள் திறமையானவர்களாக இருந்தால் மட்டும்தான் அந்தந்தப் பள்ளிகளில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அதனால் திறமை வாய்ந்தவர்கள் தான் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். பிற்காலத்தில் நிரந்தரமாக்கப்படுவீர்கள் என்ற வாக்குறுதியோடு தான் குறைந்த சம்பளத்தில் பணியில் சேர்ந்தார்கள். ஆரம்பத்தில் மாதம் 5,000 ரூபாயாக இருந்த சம்பளம் 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு 7,700 ரூபாயாக இருக்கிறது.

அரசாங்கம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கிவிடக்கூடாது என்பதற்காக உள்நோக்கத்தோடு திட்டமிட்டு உபயோகப்படுத்துகிறார்கள். வருடத்தில் 11 மாதங்கள் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் சம்பளம் கொடுக்காமல் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் தற்காலிக பணியாளராக தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். எந்த விதத்திலும் மாணவர்களுக்கு கற்பிக்கின்ற விஷயத்தில் அவர்கள் திறமை குறைந்தவர்களும் இல்லை.

10 ஆண்டுகளை தாண்டி குறைந்த சம்பளத்தில் பகுதிநேரம் பணியாற்ற கூடியவர்களாக தற்காலிக பணியில் தொடர்ந்து கொண்டிருப்பதால் அவர்களை சார்ந்த குடும்பத்தார் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். எப்படியும் நிரந்தரமாக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு பணியாற்றி கொண்டிருக்கின்ற பகுதிநேர ஆசிரியர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

தமிழக அரசு மனிதாபிமானத்தோடு, கொடுத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். ஒருமனதாக எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானமாக தான் இது இருக்கும். இன்னும் தாமதப்படுத்தாமல் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குகின்ற முடிவை தமிழக அரசு எடுத்து அந்தக் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்”என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe