Part time teachers request to give Pongal bonus, advance

Advertisment

பொங்கல் பண்டிகை வர உள்ளதால் அரசுப்பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிகிற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார், “பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் கேட்டு பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைத்து உள்ளோம். பண்டிகை முன்பணத்தை எங்களின் மாத சம்பளத்தில் தவணையாக பிடித்தம் செய்து கொள்ளலாம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை பகுதிநேர ஆசிரியர்கள் கற்றுத்தருகிறோம். அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள், பகுதிநேர ஊழியர்கள் என அனைவருக்கும் அரசின் போனஸ் கிடைக்கிறது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் 2012_ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் அட்வான்ஸ் இதுவரை கிடைக்க செய்யவில்லை.

எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தி.மு.கவின் தேர்தல் அறிக்கையின் 181_ஆவது வாக்குறுதியை நிறைவேற்றி தருவார் என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்நோக்கி காத்துள்ளோம். 19 மாதங்கள் ஆகிவிட்டது. எனவே, எங்களின் சம்பளத்தை உடனே உயர்த்த வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆகவே முதல்வர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தினால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களின் வேண்டுகோள் நிறைவேறும் நிலை உள்ளது. இனி முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும் " எனக் கூறியுள்ளார்.