Park closed 12 years ago; Chief Minister inaugurated today

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கியும்வைத்தார்.

Advertisment

கொளத்தூர் தொகுதியில் திரு.வி.க. நகர் பல்லவன் சாலையில் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சிறுவர் பூங்கா கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 14 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 5 பல்நோக்கு மையங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஜவஹர் நகரில் உள்ள கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

Advertisment

சென்னை ஷெனாய் நகரில் உள்ள மிகப்பழமையான பூங்காக்களில் ஒன்றான திரு.வி.க. பூங்காவையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்ததன் காரணமாக திரு.வி.க. பூங்கா 2011 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. ஏறத்தாழ 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் 2018 ஆம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

பல்லவன் சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பெண்களுக்கும் மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அவர்களிடம் பேசிய முதலமைச்சர், “திராவிட இயக்கத்தின் அடிப்படை என்பது கல்வி வேலைவாய்ப்பில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என்பது தான். வளர்ச்சி என்பது அனைவருக்குமான வளர்ச்சியாக இருந்திட வேண்டும். கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். கல்வி கிடைக்க தடை ஏற்பட்டால் அதை உடைக்க வேண்டும். நீங்கள் அடுத்தடுத்து முன்னேறுவதற்கான முதல் படியாகவும், நீங்கள் அடுத்தடுத்த நிலைக்கு செல்வதற்கும் நீங்கள் கற்ற கல்வி உறுதுணையாக இருக்க வேண்டும். மனதார அத்தனை பேரையும் வாழ்த்துகிறேன்” என்றார்.