Parents petition for return certificate of son studying medicine in Russia

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் இன்று ஆப்பக்கூடல் அடுத்த ஆ.புதுப்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்(44) தனது மனைவி தங்கமணியுடன் வந்து எஸ்.பி. அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.

Advertisment

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நாங்கள் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஜனார்த்தன் (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காக எங்கள் சத்தியை மீறி அவனை மருத்துவம் படிக்க அனுமதித்தோம். இந்நிலையில் அனுமன் தீர்த்தம், ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கிருபானந்தம் என்பவர் எனது மகனின் நண்பர் மூலம் அறிமுகமாகி எனது மகனை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

Advertisment

ஏற்கனவே கிருபானந்தம் இதேபோன்று 20 மாணவர்களை ரஷ்யா அழைத்துச் சென்று மருத்துவப் படிப்புக்கு சேர்த்து உள்ளார். இதற்காக அவர் ஏஜென்ட் போல் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு எனது மகன் ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்கு சேர்ந்தான். அதற்குபுரோக்கர் கமிஷனாக அவரிடம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் எனது மகன் ஒரு வருடம் ஆன்லைன் மூலமாக மருத்துவம் படிப்பு படித்தான். அதன் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்றான். அப்போது எனது மகனின் அனைத்து அசல் சான்றிதழ்களை கிருபானந்தம் வைத்துக்கொண்டார்.

அவ்வப்போது அவர் கேட்கும் வங்கிக் கணக்கில் நாங்கள் இதுவரை ரூ.10 லட்சத்திற்கு மேல் அனுப்பி உள்ளோம். இந்நிலையில் தற்போது எனது மகன் ஏப்ரல் மாதம் மருத்துவ தேர்வு எழுத உள்ளார். அதற்காக எனது மகனின் அசல் சான்றிதழை மருத்துவ பல்கலைக்கழகத்தினர் கேட்டுள்ளனர். ஆனால் கிருபானந்தம் அசல் சான்றிதழை கொடுக்காமல் காலம் தாழ்த்தி பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

Advertisment

இதுகுறித்து ஏற்கனவே அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு பதிலும் வரவில்லை. அசல் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே எனது மகனால் தேர்வு எழுத முடியும். இதனால் எனது மகன் மன உளைச்சலில் உள்ளான். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.