காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் காமேஸ்வரன். ஆன்லைன் கல்வி மூலமாக இவருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த சுஜிதா என்பவருக்கும் காதல் உருவாகியுள்ளது.
சென்னை வந்த சுஜிதாவை காமேஸ்வரன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். கேரளாவில் தனது மகளைக் காணவில்லை என சுஜிதாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில்,செல்போன் சிக்னலைகொண்டு சுஜிதா சென்னையில் இருப்பதை காவலர்கள் கண்டுபிடித்தனர். கேரளப் போலீசார் தங்களைத்தேடி வருவதை அறிந்த காதலர்கள் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கேரளக் காவல்துறையினர் பெண்ணை அழைத்துச் செல்ல வந்த போது சுஜிதா அவர்களுடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வாட்ஸ்ஆப் மூலம் நீதிபதியைத்தொடர்பு கொண்டு சம்பவத்தை எடுத்துக்கூற, இருவரும் மேஜர் என்பதால் திருமணம் செல்லும் எனநீதிபதிகூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து காமேஸ்வரனுடன் சுஜிதாவை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.