கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்துள்ள பாளையங்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கிஷோர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்காகச் சென்றுள்ளார். அப்போது இவருக்கும், எடப்பாடியைச் சேர்ந்த நித்தீஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கிப் பயின்று வந்தனர். அந்த வகையில் 3ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்தபோது படிப்பு செலவிற்காக அங்குள்ள கொரியர்  நிறுவனம் ஒன்றில்  பகுதி நேர பணியிலும் சேர்ந்துள்ளனர். அச்சமயத்தில் ரஷ்ய நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள பொருளை டெலிவரி செய்ததற்காக 2023ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் சிறையில் இருக்கக்கூடிய அவர்களைப் மீட்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர்கள் வக்கீல் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிஷோர் திடீரென இன்று ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அப்பா நான் இங்கே கையெழுத்துப் போட மாட்டேன் என்று சொன்னேன். போருக்கு அவர்கள் இங்கே இருந்து கூப்பிட்டு போயிட்டு இப்ப நீ கையெழுத்து போட்டுத்தான் ஆக வேண்டும். இப்போது நீ கையெழுத்து போடவில்லை என்றால் அடிக்க ஆரம்பிச்சிருவோம். அது இதுன்னு சொல்லி  மிரட்டுகிறார்கள். அறையை மூடி வச்சிருவேன்னு சொல்லிவிட்டு மிரட்டுகிறார்கள். இப்ப கையெழுத்துப் போட்டுத்தான் ஆகணும்ன்ற மாதிரி சொல்கிறார்கள். எனக்கு என்ன பண்றேன்னு தெரியவில்லை.

இனி எனக்கு போன் தர மாட்டாங்கன்ற மாதிரிதான் தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியும் அவர்களும் உடனடியாக தனது மகனை மீட்க வேண்டும் என்று கிஷோரின் பெற்றோர் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், இந்த போரில் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் பொருளாதாரம் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.