தற்கொலையா? கொலையா? ஈரோடு மாணவி உயிரிழப்பில்  நீதி விசாரணை கேட்டு பெற்றோர் புகார்! 

எங்கள் மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது. இயற்கையாக இறக்கவில்லை. தற்கொலையா?அப்படியென்றால் அதற்கு யார் காரணம் அல்லது கொலையா என்றும் தெரியவில்லை. எங்களுக்கு உரிய நீதி வேண்டும் என பரிதவிப்புடன் கதறுகிறார்கள் ஈரோடு கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்த மாணவியின் பெற்றோர்.

நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் அன்பு நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் சாதனா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயோ மெடிக்கல் படித்து வந்தார். இதற்காக அவர் அந்த கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிபடித்து வந்தார்.

Parents complain of incident in Erode

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாணவியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு சீரியஸ் நிலமைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவிக்க பின்னர் அந்த மாணவி சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிலமை கவலைக்கிடமாக அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த மாணவியை கொண்டு வந்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்த மாணவி இறந்து விட்டதாக கூறி விட்டனர். கல்லுரி நிர்வாகம் மாணவி சாதனாவுக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு உயிரை பறித்து விட்டது என கூறுகிறார்கள்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து மகளின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர். பின்னர் மாணவியின் தந்தை சத்தியமூர்த்தி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர், தனது மகளுக்கு இதுவரை எப்போதும் வலிப்பு வந்ததில்லை எனது மகளின் சாவில் மிகப் பெரிய சந்தேகம் உள்ளது. என்ன நடந்தது என்கிற உண்மை வெளியே வர வேண்டும் என் மகளின் இறப்புக்கு உரியநீதி வேண்டும் இதற்கு போலீசார் உண்மையாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இறந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு மருத்துவமனையிலிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவி சாதனாவின் மர்ம மரணம் கல்லூரி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Erode incident Investigation police
இதையும் படியுங்கள்
Subscribe