ADVERTISEMENT

சாதி மறுப்பு திருமணத்தால் இளம்பெண் படுகொலை; பெற்றோர் கைது 

03:30 PM Jan 10, 2024 | ArunPrakash

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19). அந்த ஊருக்கு பக்கத்து ஊரான பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நவீன்(19) டிப்ளமோ படித்துள்ளார்.

ADVERTISEMENT

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த நவீனும் ஐஸ்வர்யாவும் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதால் நண்பர்களாகப் பழகி பின்னர் காதலர்களாகினர். இருவரும் திருப்பூர் பகுதியில் வெவ்வேறு வேலைகள் செய்து வந்தாலும் ஒரே இடத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் ஐஸ்வர்யாவின் தந்தை பல்லடம் சென்று காவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா - நவீன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த போலீசார், ஜனவரி 2 ஆம் தேதி ஐஸ்வர்யாவை மீட்டு அவரது தந்தை பெருமாள் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

ஐஸ்வர்யாவை அவரது தந்தை அழைத்துச் செல்வதைப் பார்த்த நவீனும் அவர்களின் வாகனத்தை ஒட்டியே தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து ஊருக்கு வந்துள்ளார். ஐஸ்வர்யா வீடு வரை சென்று அதன் பிறகு தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் சில நாட்களாக ஐஸ்வர்யாவை வெளியில் காணவில்லை. அவரைக் கண்டுபிடிக்கக் கோரி வா.கொல்லைக்காடு காவல் நிலையத்தில் நவீன் புகார் கொடுத்திருந்த நிலையில், மற்றொரு வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் ஐஸ்வர்யாவை அவரது தந்தை உள்பட உறவினர்களே கொன்று எரித்துவிட்டதாகக் கூறப்பட்டிருந்ததாக அறியப்பட்டது. அதன் பிறகு தலைமறைவாக இருந்த பெருமாள் மற்றும் அவரது மனைவி ரோஜா உள்பட பலரை தேடிப் பிடித்த போலீசார் நடத்திய விசாரணையில், சாதி மறுப்பு திருமணம் செய்தது எங்களுக்கு அவமானமாக இருந்ததால் ஐஸ்வர்யாவை கொன்று மயானத்தில் வைத்து எரித்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த போலீசார், ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் தாய் ரோஜா ஆகிய இருவரையும் கைது செய்து பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பெற்ற மகளையே கொன்ற தாய் - தந்தையை நீதிமன்றம் அழைத்து வந்தபோது ஊரே வேடிக்கை பார்த்தது. பல்லடம் போலீசார், திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை வழக்குப் பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பி வைத்ததால்தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பும் நிலையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT