Parents and teachers returning to government schools ..!

Advertisment

கரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. அதேவேளையில், கரோனா காரணமாக நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்களும் தங்கள் வருமானத்தை இழந்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது 2021-2022க்கான கல்வியாண்டு துவங்கி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

கரோனா முதல் அலையின்போது பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்ட போது, தனியார் பள்ளிகள் 75% கட்டணத்தை வாங்கிக்கொள்ள அரசு அனுமதி அளித்தது. மேலும், அந்த 75% கட்டணத்தை மூன்று தவணைகளாக வாங்கிக்கொள்ளவும் அனுமதி அளித்திருந்தது. அதே நடைமுறையையே தற்போதைய கல்வியாண்டிற்கும் பின்பற்றப்பட்டுவருகிறது. கரோனாவால் வாழ்வாதாரம் மற்றும் வருமானம் இழந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்த்துவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணி செய்து வருபவர் அன்பு. அவரது கணவர் அன்புச் சோழன். இவர், அதே மாவட்டம் திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்கள் மகள் ஸ்ரீ விவேகாவை, அவரது தாயார் அன்பு பணி செய்யும் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிப்பதற்காக சேர்த்துள்ளனர்.

Advertisment

இந்த ஆசிரிய தம்பதி போலவே அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் மிகுந்த ஆர்வத்துடன் சேர்த்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக திகழும் இந்த ஆசிரியர் தம்பதியின் செயல் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நல்ல கல்வியை அரசு பள்ளிகளில் தர முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர்களிடம் மட்டுமல்ல அதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது கண்டு பல்வேறு தரப்பினரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.