
தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதால் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இதில் மாணவர்களின் பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பிறகு இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாளை பள்ளி திறக்கப்படுவதால் பெற்றோர், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பள்ளியில் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் எவ்வித அச்சமும் படத்தேவையில்லை. ஒரு மேஜையில் இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். எனவே மாணவர்களை பெற்றோர்கள் தயக்கமின்றி பள்ளிக்கு அனுப்பலாம். மாணவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அதில் குறைபாடு இருந்தாலோ அல்லது மாஸ்க் கிழிந்திருந்தாலோ பள்ளியில் வேறு மாஸ்க் மாணவர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.