Advertisment

மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்! ராமதாஸ்

செங்கல்பட்டு பரனூரில் உள்ள சுங்கச்சாவடி வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளால் சூறையாடப்பட்டிருப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூரில் உள்ள சுங்கச்சாவடி நேற்று அதிகாலை வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளால் சூறையாடப்பட்டிருக்கிறது. சட்டத்தை மதிக்காமல் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்றாலும் கூட, எதிரி நாட்டு இலக்குகளுக்கு இணையாக சுங்கச்சாவடிகள் கோபத்தை சம்பாதித்து வைத்துள்ளன என்பதற்கு இந்நிகழ்வு எடுத்துக்காட்டு ஆகும்.

Advertisment

toll gate

சுங்கச்சாவடியை கடப்பதற்கு முன்பாகவும், சுங்கச்சாவடியை கடந்த பிறகும் ஒரு வாகன ஓட்டியின் ரத்த அழுத்தத்தை அளவிட்டு பார்த்தால் இரண்டுக்கும் இடையே மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பார்க்க முடியும். ஒரு பக்கம் கட்டணச் சுரண்டல்களில் ஈடுபடும் சுங்கச்சாவடிகள் மறுபுறம் வாகன ஓட்டிகளை மனதளவில் காயப்படுத்தும் இடங்களாக மாறி வருகின்றன. அதன் விளைவு தான் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி ஓட்டுனர்களாலும், பயணிகளாலும் நொறுக்கப்பட்டுள்ளது.

பரனூர் சுங்கச்சாவடியை கடந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு கட்டத்தில் அவரைத் தாக்க முயன்றுள்ளனர்; தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுனர்களும், பயணிகளும் இணைந்து தான் சுங்கச்சாவடியை தாக்கியுள்ளனர். இது அந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் வெடித்த கோபத்தின் வெளிப்பாடு அல்ல. நீண்டகாலமாகவே சுங்கச்சாவடி பணியாளர்கள் மீது ஓட்டுனர்களுக்கும், பொது மக்களுக்கும் இருந்த கோபம் தான் நேற்றைய சம்பவத்தால் ஏற்பட்ட பொறி காரணமாக பெரும் தீயாக மாறி சுங்கச்சாவடியை சூறையாடும் அளவுக்கு சென்றிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு சுங்கச்சாவடி பணியாளர்களின் பொறுப்பற்ற செயலும், சுங்கக்கட்டணக் கொள்ளையும் தான் முக்கிய காரணமாகும்.

தமிழகத்தின் நெரிசல் மிக்க சுங்கச்சாவடிகளில் பரனூர் சுங்கச்சாவடி முதன்மையானதாகும். ஒவ்வொரு நாளும் இந்தச் சுங்கச்சாவடியை இரு மார்க்கங்களிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அவற்றில் பல வாகனங்களிடம் ரசீது கொடுக்காமல் கட்டணம் வசூலித்தல், வாகன ஓட்டிகளை மிரட்டுதல் உள்ளிட்ட செயல்களில் சுங்கச்சாவடி பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களின் இந்த அணுகுமுறை தான் சுங்கச்சாவடிகள் பதற்றம் மிகுந்தவையாக திகழ காரணமாகும்.

மற்றொருபக்கம் சுங்கச்சாவடிகள் சுரண்டல் மையங்களாக திகழ்கின்றன. பரனூருக்கும், திண்டிவனம் ஆத்தூருக்கும் இடையிலான 4 வழிச்சாலை அமைக்க 2005-ஆம் ஆண்டில் ரூ.536 கோடி மட்டுமே செலவானது. அதற்கு பிந்தைய 15 ஆண்டுகளில் இந்த சுங்கச்சாவடிகளில் மட்டும் ரூ.2,000 கோடிக்கும் கூடுதலாக சுங்கவரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான 13 ஆண்டுகள் ஆறு மாத காலத்தில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, செலவுக்கணக்குகளும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ள நிலையில், இந்த நெடுஞ்சாலையில் முதலீடு ஏற்கனவே எடுக்கப்பட்ட பிறகும், இன்னும் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை விட மோசமான சுரண்டல் எதுவும் இருக்க முடியாது.

அதுமட்டுமின்றி, சுங்கக்கட்டணங்கள் ஆண்டுதோறும் 15 முதல் 20% வரை உயர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியும், பண வீக்கமும் 5 முதல் 7 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது. தனிநபர்களின் ஊதிய உயர்வு 5 முதல் 8 விழுக்காட்டுக்குள் தான் உள்ளது. ஆனால், சுங்கக் கட்டணம் மட்டும் ஆண்டுக்கு 20% வரை உயர்த்தப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது ஆகும். இதுபோன்ற வெறுப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தான் சுங்கச்சாவடி தாக்குதலில் முடிகின்றன.

ramadoss

பரனூர் சுங்கச்சாவடி மட்டும் தான் என்றல்ல. அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியிலும் நேற்று சுங்கச்சாவடி ஊழியர்களால் பயணிகள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு சுங்கச்சாவடியில் ஒரு ஓட்டுனர் தாக்கப்படுவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் அனைத்தும் போர்க்களமாகிவிடும்.

இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு முழுமையாக முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மற்ற சுங்கச்சாவடிகளிலும் அளவுக்கு அதிகமான சுங்கக்கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் மேலாக வாகன ஓட்டிகளிடம் நட்பாக நடந்து கொள்வது என்பது குறித்து சுங்கச்சாவடிகளின் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கவும் மத்திய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Chengalpattu pmk Ramadoss toll gates plaza PARANUR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe