Skip to main content

கலையின் அத்தனை வடிவங்களையும் பயன்படுத்தும் பா.ரஞ்சித்!

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' மற்றும் மெட்ராஸ் ரெக்கார்ட் நிறுவனம் இரண்டும் இணைந்து 'கேஸ்ட் லெஸ் கலக்ட்டிவ்ஸ்' இசைக்குழு நடத்தும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சென்னை கீழ்பாக்கம் CSI பெயின் பள்ளியில் நடந்ததுதான் முதல் விழா. பின்னர் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் சில தருணங்களில் இவர்களது இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சாதி ரீதியான வித்தியாசங்கள், அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியம் மிக்க வரிகள் கொண்ட பாடல்கள், வரவேற்பை பெற்றன, நிகழ்ச்சியும் வெற்றிபெற்றது.

 

ranjith

 

இயக்குனர் ரஞ்சித் இயக்கம் 'காலா' திரைப்படத்திலும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் பணியாற்றியுள்ளனர். ஏற்கனவே 'மஞ்சல்' என்று நாடக வடிவில் மனிதக் கழிவை அள்ளும் அவலத்துக்கு ஆளான சுகாதார பணியாளர்களின் வாழ்வை வெகுஜனத்தின் முகத்தில் அடிப்பது போல் காட்டியது நீலம். இப்பொழுது இசை வடிவிலும் கருத்துக்களை பரப்பும் முயற்சியை செய்கிறது.    

 

மீண்டும் கீழ்பாக்கம் சி.எஸ்.ஐ பெயின் பள்ளியில் 19.05.18 தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எட்டு பேண்ட் குழுக்கள் மற்றும் பல இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை  மெட்ராஸ் மேடை, மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ், நீலம் பண்பாட்டு மையம் சேர்ந்து நடத்துகிறது. சென்றமுறை போன்று இந்தமுறையும் சமூகபுரட்சி மற்றும் பெண்களுக்கான புரட்சிகர பாடல்களும் இருக்குமாம். இந்த முறையும் சமத்துவத்திற்கான நிகழ்ச்சியாகவே இது அமையும் என விழாக்குழுவின் சார்பில் கூறப்பட்டுள்ளது. தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தன்னை சார்ந்த மக்களுக்கான செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தும் ரஞ்சித்தைப் பலரும் பாராட்டுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.

Next Story

கலங்கி நிற்கும் குடும்பத்தினர்; பவதாரிணி உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி (படங்கள்)

Published on 26/01/2024 | Edited on 26/01/2024

 

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.

இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமான மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடலானது அவரது இல்லம் உள்ள அமைந்துள்ள தி நகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பிரபலங்களும் அஞ்சலி செலுத்த அங்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ராமராஜன், இயக்குநர் வெற்றிமாறன், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நடனக் கலைஞர் காயத்ரி ரகுராம், நடிகர் சிவகுமார், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி, விஷால்,விஜய் ஆண்டனி, நடிகர் ஆனந்தராஜ்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகை ராதிகா, நடிகர் ஸ்ரீகாந்த்  உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.