Paramilitary landed at Salem; Election security missions must!

சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக சிஐஎஸ்எப் எனப்படும் துணை ராணுவ வீரர்கள் 189 பேர் சேலத்திற்கு வந்திறங்கியுள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை (பிப். 28) அதிகாலையில், தனி ரயில் மூலம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எப்) இரண்டு கம்பெனி கொண்ட 189 போலீசார் சேலம் வந்து சேர்ந்தனர். சேலம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை மாவட்ட, மாநகர காவல்துறையினர் வரவேற்றனர்.

சிஐஎஸ்எப் வீரர்கள், எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் வந்துள்ளனர். இந்தக் குழுவில் உதவி கமிஷனர் ராகுல் ராய், 4 ஆய்வாளர்கள், 183 வீரர்கள் அடங்கியுள்ளனர். இவர்கள் இரண்டு குழுவாகப் பிரிக்கப்பட்டு சேலம் மாநகர பகுதிக்கும், மாவட்ட பகுதிக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisment

சேலம் மாவட்ட பகுதிக்கு 91 வீரர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்களை, ஆட்டையாம்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ. இலியாஸ் அழைத்துச் சென்றார். அவர்களுக்கு, ஓமலூர் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதிகளில் 92 வீரர்களுக்குப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களை மாநகரக் காவல்துறையினர் அழைத்துச்சென்று, லைன்மேடு காவலர் சமுதாயக் கூடத்தில் தங்க வைத்துள்ளனர். இவர்களுக்கு சோதனைச்சாவடிகள், பறக்கும் படைகள் ஆகியவற்றில் பணி ஒதுக்கீடு வழங்கப்படும்

சேலம் மாவட்டத்தில், திங்கள்கிழமை (மார்ச் 01) முதல் புதிதாக சில இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், அவற்றில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் காவல்துறையினர் கூறினர். தேர்தல் நெருக்கத்தில் மேலும் சில கம்பெனி வீரர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர்.