Skip to main content

கொரோனா கால கொலைகள்; மாத்திரை கொடுத்தவருக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

pantamic time incident two person 35 years rigorous imprisonment

 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், ஈரோட்டில் அதே கொரோனா என்ற பெயரை பயன்படுத்தி ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

 

சென்னிமலை அருகே கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்த 75 வயது கருப்பண்ண கவுண்டர். இவருடைய மனைவி 58 வயது மல்லிகா.  இவர்களது மகள் 30 வயது தீபா. இவர்களின் தோட்டத்தில் 65 வயது குப்பம்மாள் வேலை செய்து வந்திருக்கிறார். இதனிடையே கருப்பண்ண கவுண்டரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார் கல்யாணசுந்தரம். 

 

அந்த வகையில், கருப்பண்ண கவுண்டரிடம் ரூபாய் 14 லட்சம் வரை கல்யாணசுந்தரம் பல வருடங்களுக்கு முன்பே கடன் வாங்கி இருந்திருக்கிறார். தொடர்ந்து கருப்பண்ண கவுண்டர் கல்யாணசுந்தரத்திடம் கடனை கேட்டு வர, ஒரு கட்டத்தில் கடும் கோபமுற்ற கல்யாணசுந்தரம் உனது பணத்தை தர முடியாது என கருப்பண்ண கவுண்டரை மிரட்டியிருக்கிறார். ஆனாலும் கருப்பண்ண கவுண்டர் பணத்தை தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். 

 

இந்த நிலையில்தான் கடந்த 2021 ஜூன் மாதம் கொரோனா கால பொதுமுடக்கத்தின் போது பால் வியாபாரம் செய்து வந்த கல்யாணசுந்தரம் கருப்பண்ண கவுண்டர் குடும்பத்தை நூதன முறையில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.  அதன் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்வது போல் முடிவு செய்து அதற்கான திட்டத்தை நிகழ்த்தி இருக்கிறார். பால் வியாபாரம் செய்யும் போது சென்னிமலை குமாரபுரி எம்.பி.என். நகர் பகுதியில் வசித்து வந்த சிதம்பரம் என்பவர் தனது மகன் சபரி கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு போக காத்திருப்பதாகவும், தனது மகனுக்கு ஏதாவது வேலை இருந்தால் வாங்கி கொடுங்கள் எனவும் கல்யாணசுந்தரத்திடம் கூறியிருக்கிறார். இதை பயன்படுத்திக் கொண்ட கல்யாணசுந்தரம் தனது திட்டப்படி, “கொரோனா பரிசோதனை செய்வதற்கான வேலை இருக்கிறது. அதை செய்தால் மாதம் 20 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். உங்கள் மகனை அனுப்புகிறீர்களா” என சிதம்பரத்திடம் கேட்க, அவரும் தனது மகனை கல்யாணசுந்தரத்தோடு அனுப்பி வைத்தார். 

 

2021 ஜூன் 21ந் தேதி காலை கல்லூரி மாணவனான சபரியிடம் சல்பாஸ் என்ற உயிர்க்கொல்லி மாத்திரையை கொடுத்து கருப்பண்ண கவுண்டர் தோட்டத்திற்கு அருகில் கூட்டி சென்று, “அந்த தோட்டத்தில் இருப்பவர்களிடம், சுகாதாரத் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்ததாகக் கூறி, இந்த மாத்திரைகளை கொடுத்து கொரோனா பரிசோதனை எனச் சொல்லி சாப்பிட வைக்க வேண்டும். மறுபடியும் அடுத்த நாள் அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறி, கொரோனா டெஸ்ட் எடுப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பே இந்த மாத்திரையை சாப்பிட்டால்தான் கொரோனா இருப்பது தெரியவரும் எனக் கூற வேண்டும்” என்று சொல்லி கல்யாணசுந்தரம் அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற சபரி, கொரோனா டெஸ்ட் எடுப்பதற்காக வந்திருக்கிறோம். டெஸ்ட் எடுப்பதற்கு முன்பு மாத்திரை சாப்பிட வேண்டும் எனச் சொல்லி அங்கு இருந்த கருப்பண்ண கவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் கூலித் தொழிலாளியான குப்பம்மாள் ஆகிய நால்வருக்கும் நான்கு மாத்திரைகளை கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். அது விஷமாத்திரை என்பது தெரியாமல் அந்த நான்கு பேரும் சாப்பிட்டு விட்டனர்.

 

மாத்திரை கொடுத்த பிறகு அங்கிருந்து வெளியேறிய சபரி, கல்யாணசுந்தரத்திடம் வந்து கொடுத்தது பற்றி கூறியிருக்கிறார். “சரி உனக்கு இன்றைய வேலை முடிந்து விட்டது. நீ வீட்டுக்கு போ..” எனச் சொல்லி அவரை அனுப்பி விட்டார் கல்யாணசுந்தரம். மாத்திரையை சாப்பிட்ட நான்கு பேரும் அடுத்தடுத்து மயக்கமாகி வீட்டின் முன்பு விழுந்து கிடக்க, அப்பகுதியில் இருந்தவர்கள் போய் பார்த்து உடனே கருப்பண்ண கவுண்டரின் மருமகனும் தீபாவின் கணவனுமான பிரபு என்பவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கூறி இருக்கிறார்கள். சென்னிமலையிலிருந்து பிரபு வேகமாகச் சென்று அங்க போய் பார்க்கும்போது, நான்கு பேரும் வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார்கள். உடனே அவர்களை வாகனம் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பிறகு தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு சென்று பார்த்தபோது நான்கு பேரும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்துவிட்டனர். அவர்களை பரிசோதனை செய்ததில் 4 பேரும் சாப்பிட்ட மாத்திரை சல்பாஸ் என்கிற விஷ மாத்திரை என்பது தெரியவந்தது. பிறகு போலீஸ் விசாரணையில், இது இந்த நான்கு பேரையும் கொல்வதற்காக கல்யாணசுந்தரம் நடத்திய கொலை திட்டம் என்பதும் தெரிய வந்திருக்கிறது. ஒரே நாளில் கல்யாணசுந்தரத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்ததில், கருப்பண்ண கவுண்டர் தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால், அவரை கொலை செய்ய இப்படி ஒரு முடிவை செய்தேன். இதுபோன்று செய்தால் யாருக்கும் தெரியாது என நினைத்து இதை செய்து விட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

 

கடந்த இரண்டு வருடங்களாக ஈரோடு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த கொலை வழக்கில் நேற்று (ஜன. 09) தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான கல்யாணசுந்தரத்துக்கு 35 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கல்யாணசுந்தரத்திற்கு உறுதுணையாக இருந்த சபரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்