/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/farmer-in_0.jpg)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ளது நடுமேட்டுக்குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரவி, வயது 43. கூலி வேலை செய்துவரும் இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ஜெயந்தி சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். மனைவியை இழந்த கவலையினால் ரவி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர வேலைக்குச் செல்லாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாமல் கண்டபடி சுற்றி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒண்டிவீரன் கோவில் அருகே முந்திரி தோப்பில் தலையில் ரத்த காயத்துடன் பிணமாகக் கிடந்துள்ளார் ரவி.
இதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு, காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி அபிநவ், சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மர்மநபர் யாரோ ஒருவர் கோவிலில் புகுந்து அங்கிருந்த குத்து விளக்கை எடுத்துவந்து ரவி தலையில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட ரவியின் உடலைபிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவி அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என பல்வேறு கோணங்களில் காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நொண்டிவீரன் கோவில் பூசாரி உட்பட ஆறு பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)