
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள நடுமேட்டுக்குப்பதிலுள்ள முந்திரி தோப்பின் நடுவே அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஊரணி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒரு சிலருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கோயிலுக்கு அழைத்துவந்து பூஜை செய்தால் உடல் நிலை சரியாகிவிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.
இந்நிலையில் நேற்று முன்தினம் (09.09.2020) கோயிலில் படையில் வைக்க ஒரு பிரிவினர் கோயிலுக்கு சென்றிருந்தனர். அப்போது கோயில் முன் மர்ம நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு விரைந்துசென்ற போலீசார் இறந்தவர் குறித்து விசாரணை செய்தனர். அவர் நடுமேட்டுக்குப்பத்தை சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. 43 வயதாகும் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், விஜயகுமார், விஜயபாரதி என்ற 2 மகன்களும், பிரதீபா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
ஜெயந்தி சாலைவிபத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதனால் மன வேதனையடைந்த ரவி மதுவுக்கு அடிமையாகி, சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முந்திரி தோப்பிலுள்ள நொண்டி வீரன் கோவிலில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததால் அவரை யாராவது அடித்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட ரவியின் சடலம் உடல் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக அடித்து கொல்லப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் கோயில் பூசாரி உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.