Advertisment

"ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை” - ஓ.பன்னீர்செல்வம்

pannerselvam says megathathu dam issue

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரை தர முடியாது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்துக்குத்தமிழகத்தைச்சேர்ந்த பல்வேறு அர்சியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் பல அணைகள் கட்டப்பட்டபோது வேடிக்கை பார்த்தது, காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினை திரும்பப் பெற்றது, காவேரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது, மத்திய ஆட்சியில் இருந்து கொண்டே காவேரி நடுவர் நீதிமன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது என கர்நாடகத்திற்குச் சாதகமான நிகழ்வுகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதன் காரணமாக, தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டிற்குப் பாதகமான நடவடிக்கைகள் எடுப்பதை அண்டை மாநிலங்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.

Advertisment

அண்டை மாநிலமான கேரளாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்கின்ற முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாட்டிற்கு சாதகமாக எதையும் செய்ய முடியவில்லை. மாறாக, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாறு பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தது, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாதது, பேபி அணை கட்டப்படும் என்று அறிவித்தது என பலவிதமான இன்னல்களைக் கேரள அரசு கொடுத்துக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சி தனது பங்கிற்கு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறி வருகிறது. இதுகுறித்து அண்மையில் புது டெல்லியில் பேட்டி அளித்துள்ள கர்நாடக மாநில துணை அமைச்சர் அவர்கள், மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தவித நஷ்டமும் இல்லை என்றும், இதை புரிய வைக்க முயற்சிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். மேகதாது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை குறித்து தமிழ்நாட்டிற்கு எதிராகத்தொடர்ந்து கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி அளிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆட்சிக்கு வந்தவுடன் மேகதாது குறித்து அம்மாநில துணை முதலமைச்சர் பேசியபோது, “மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதலமைச்சருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள்" என்று நகைச்சுவையாக தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் பதில் அளித்தார். இந்த முறை அளித்துள்ள பேட்டியும் அதேபோல்தான் அமைந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு எதிராக போராட முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சனையில், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பேசி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்றுத்தரவும், "மேகதாது அணை கட்டப்படாது” என்று கர்நாடக அரசை அறிவிக்கச் சொல்லவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காமல், போராடப் போவதாக கூறுவது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகமாகும்.

தற்போது கர்நாடக அணைகளின் மொத்த கொள்ளளவில் 60 விழுக்காடு நீர் இருக்கின்ற போதே, தமிழ்நாட்டிற்கு மாதாந்திர அடிப்படையில் தர வேண்டிய உரிய நீரைத்தர கர்நாடகம் மறுக்கின்றது. அணைகள் நிரம்பி வழிந்தால் தான் உபரி நீர் திறந்துவிடப்படும் என்ற முடிவில் கர்நாடக அரசு இருக்கின்றது. இந்த நிலையில், 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. மேற்படி நிலையை தமிழக முதலமைச்சர், கர்நாடக மாநில முதலமைச்சருக்கு புரிய வைத்து, மேகதாது திட்டத்தினை கைவிட வலியுறுத்த வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.

dam karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe