ADVERTISEMENT

ஊராட்சி மன்ற வாசலில் மது அருந்துபவர்களின் அட்டகாசம்! கண்டுக்கொள்ளாத தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்!

05:30 PM Apr 06, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம், மாநகராட்சி எல்லைக்கு அடுத்துள்ள கிராமம் பெருமுகை ஊராட்சி. பெங்களுரூ டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இந்த கிராமம். இந்த ஊராட்சிக்கான நிர்வாக அலுவலகமான ஊராட்சி மன்ற அலுவலகம் புதியதாக சமீபத்தில் புனரமைக்கப்பட்டது.

அந்த அலுவலகத்தின் அருகில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. பல சிறுசிறு தொழிற்கூடங்கள் உள்ளன. சாலை ஓரமாகவே இந்த அலுவலகம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் இருந்தபடியே இருக்கும். அப்படியிருக்கும் நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த அலுவலகம் வாசலில் அமர்ந்து தினமும் அந்தகிராமத்தை சேர்ந்த சிலர் மது அருந்திக்கொண்டுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அந்த வழியாக செல்வதற்கே அச்சப்படுகின்றனர். மாலை மற்றும் இரவு நேரத்தில் பள்ளி நேரம் முடிந்தும், சிறப்பு வகுப்புகள் முடிந்து பெண் பிள்ளைகள் இந்த வழியாக வரமுடியவில்லையாம், அந்தளவுக்கு குடிக்காரர்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அமர்ந்துக்கொண்டு கிண்டல் செய்கிறார்களாம்.

இதுக்குறித்து ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராஜ், துணைத்தலைவர் பிரபு போன்றவர்களிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும், மது அருந்துவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். பின்னர் இதுப்பற்றி சத்துவாச்சாரி காவல்நிலையத்திற்கு ஃபோன் மூலம் தொடர்புக்கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையும் கண்டுக்கொள்ளவில்லை எனக்குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

இந்த கிராமத்தின் வழியாக பாலாறு செல்கிறது. பாலாற்றில் இரவு நேரத்தில் மாட்டுவண்டி, டூவீலர்களில் மணல் அள்ளி திருடும் கும்பல், கஞ்சா விற்கும் கும்பலே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரத்தில் உள்ளவர்களோடும், காவல்துறையினரோடும் அதிகம் நெருக்கம் உள்ளது. அதனால் புகார் சொன்னாலும் இவர்கள் கண்டு கொள்வதில்லை என்கிறார்கள்.

கிராமத்தை சிறப்பாக நிர்வாகம் செய்யவும், தவறுகளை தடுக்கவும்தான் பொதுமக்களால் தலைவர், வார்டு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். லட்சங்களில் வருமானம் வரும் ஊராட்சியின் வருவாயை எப்படியெல்லாம் சுரண்டலாம் என நினைக்கும் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் பிரச்சனைகளை கவனிக்காமல் இருப்பதற்கு யார் தண்டனை தருவது எனக்கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தவறு செய்கிறார்கள் எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியா என்கிற கேள்வியும் எழுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT