panchayat vice president resigned as could not meet  drinking water needs of people

பொதுமக்களின் தேவயை பூர்த்தி செய்யமுடியாததால் ஊராட்சி துணைத்தலைவர் ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் அம்மாபட்டினம் ஊராட்சியின் 4 வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்ற ஹா.நூர்முகமது அம்மாபட்டினம் ஊராட்சியின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என்று தனது ஊராட்சி துணைத் தலைவர்பதவியை ஹா.நூர்முகமது ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய ஹா.நூர்முகமது, “கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 4ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான் வார்டு உறுப்பினர்களால் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எங்கள் ஊராட்சி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும், 60 ஆயிரம், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தது. இதில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு தொட்டி அகற்றப்பட்டது. அதனால் தண்ணீர் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது.

Advertisment

அதனால் புதிய நீர்த்தேக்கத் தொட்டி தேவை என்று முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் கோரிக்கை மனு கொடுத்திருந்தேன். மனுதாரர் கூறியுள்ள பகுதியில் வேறு தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்குவதாக மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்தவறான தகவல் கொடுத்தார். வட்டார வளர்ச்சி அலுவலரின் இந்த பதிலுக்கு எந்த இடத்தில் எந்த திட்டத்தில் எப்போது தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது என்று மீண்டும் கேள்வி எழுப்பிய போது மனுதாரரின் கோரிக்கை முன்னுரிமை அடிப்படையில் நிறைறே்றுவதாக தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் எம். வி. எஸ் திட்டம் மூலம் குடிநீர் பெற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று நல் ஆலோசனை வழங்க கோரி முதலமைச்சருக்கு மனு செய்திருந்தேன். ஆனால் அந்த மனுவுக்கு ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் இது எங்கள் துறையில் வராதுஎன மனுவை திருப்பி அனுப்பியுள்ளார். நான் கொடுத்த கோரிக்கை மனு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் கிராம சபையில் கலந்து கொண்டு ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்டால் சம்மந்தமே இல்லாத ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பதில் சொல்வது வேதனையாக உள்ளது.

தொடர்ந்து 15 வது மானியக்குழு நிதி, பொது நிதி ஆகியவற்றை இணைத்து தண்ணீர்தொட்டி கட்ட அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. அடுத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தண்ணீர் தொட்டி கட்டிக் கொள்ள கோரிக்கை வைத்த போது தண்ணீர் தொட்டி கட்ட இந்த திட்டத்தில் இடமில்லை என்று பதில் கொடுத்துவிட்டு அங்கன்வாடி கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி கட்டடத்திற்குவேறு நிதி ஒதுக்கப்பட உள்ளது அதனால் தண்ணீர் தொட்டிக்கு நிதியை மாற்றுங்கள் என்று கேட்ட போது வேறு நிதியில் வரும் அங்கன்வாடி நிதியை திருப்பி அனுப்புங்கள், ஆனால் தண்ணீர் தொட்டி கட்ட முடியாது என்று கூறிவிட்டனர்.

Advertisment

இதனால், எந்த வகையிலும் என் கிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர். அதனால் தான் என் மக்களின் குடிநீர் தேவையை கூட தீர்க்க முடியாததால் எனது வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கடிதம் கொடுத்திருக்கிறேன்” என்றார். தன் கிராம மக்களின் தாகம் தீர்க்க முடியாமல் எதற்காக எனக்கு பதவி என்று தனது பதவியைராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.