Skip to main content

விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

The panchayat secretary was suspended for farmer incident

 

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இன்று (02.10.2023) காலை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் என பலரும் கலந்துகொண்டனர்.

 

இந்த கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கு இருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று மக்கள் மத்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

அதே சமயம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயபிரபாகரனுக்கு உற்சாக வரவேற்பு; வெற்றியைத் தேடித்தருமா கேப்டனின் அனுதாப அலை?

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Analysis of Vijaya Prabhakaran's chances of winning

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி அதிமுக, பாஜக கட்சிகளுடன் இறுதிக்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இறுதியாக தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்தது. நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர் தனித் தொகுதி, மத்திய சென்னை, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

அதில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளராக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, வேட்புமனு தாக்கலை நிறைவு செய்த விஜய பிரபாகரன் தான் போட்டியிடும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய பிரபாகரனின் பூர்விகம் விருதுநகர். தந்தையும் மறைந்த தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்தின் சொந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார் மண்ணின் மைந்தன்.  விஜயகாந்த் பிறந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு தேமுதிகாவிற்கு எப்போதுமே பேராதரவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுவும் கட்சியின் தலைவரின் அனுதாப அலையாலும், விஜயகாந்தின் மகன் என்பதாலும் விஜய பிரபாகரன் எளிதில் வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, பாஜக சார்பில்  நடிகை ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுவதால், அது ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. தற்போது, சிட்டிங் எம்பியான காங்கிரசின் மாணிக்கம் தாகூரே மீண்டும்  விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் காண்கிறார். விருதுநகர் தொகுதி குறித்து தேமுதிகவினர் பேசுகையில், விஜய பிரபாகரன் மண்ணின் மைந்தர். விருதுநகர்தான் அவரின் பூர்விகம். விருதுநகர் மக்களும் விஜய பிரபாகரனை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறார்கள். அதனால் விருதுநகரில் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விஜய பிரபாகரன் நீண்ட ஆண்டுகளாக மக்கள் சேவை, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர். மறைந்த தலைவர் விஜயகாந்த்தின் மகனான விஜய பிரபாகரன், தந்தை எதிர்கொண்ட சவால்களையும் பார்த்து வளர்ந்தவர். சொந்த தொகுதியான விருதுநகர் தொகுதியைச் சிறப்பாக கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே நோக்கம். இப்போதே விருதுநகரில் தங்கி மக்கள் பணிகளை மேற்கொள்ள விஜய பிரபாகரன் வாடகைக்கு வீடு ஒன்றை பார்த்து வைத்துள்ளார்.

அதிமுக தற்போது கூட்டணி அமைத்து இருப்பதால் இந்த முறை தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகசாமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த முறை அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கினால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேமுதிக களம் இறங்கியுள்ளது. விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன் செல்லும் இடங்களில் எல்லாம் தந்தை வழியில் செயல்படுவேன் என உருக்கமாக பேசி வருகிறார். மேலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தொடர்ந்து இந்த முறை தேமுதிக விருதுநகரை கைப்பற்ற தேவையான களப்பணிகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

விருதுநகர் மண்ணின் மைந்தன் விஜய பிரபாகரன் போட்டியிடும் முதல் மக்களவைத் தொகுதியில் வெற்றி வாகை சூடுவாரா? என்பதை ஜூன் 4 ஆம் தேதி தான் தெரியும்.  

Next Story

1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
1,200-year-old Tirumal, Vaishnavite sculptures discovered in virudunagar

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகில் அம்மாபட்டி ஊராட்சி, களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான திருமால் சிற்பம் இருப்பதாக அம்மாபட்டி வீரையா கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது, “திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார். முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். சிற்பம் 109 செ.மீ உயரமுள்ளது.

இதன் அருகில் 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் உள்ள பலகைக் கல்லில் திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்தகன்னியரில் ஒருவரான இவர், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்திருக்கிறார். சிற்பம் சேதமடைந்துள்ளது. இதன் வடக்கில் நந்தியும், ஆவுடை இல்லாத லிங்கமும் உள்ளன. இங்கிருந்து 300மீ தூரத்தில் 2½ அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிற்பம் உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அக்காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கி.பி.9-ம் நூற்றாண்டு வரை வைணவக் கோயில்களில் சப்தமாதர் வழிபாடு இருந்துள்ளது. 

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

அருகிலுள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். இதில் இருந்த கற்களை எடுத்து லிங்கத்தைச் சுற்றி வைத்துள்ளனர். மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒரு செங்கலின் அளவு, நீளம் 33 செ.மீ, அகலம் 16.5 செ.மீ, உயரம் 7 செ.மீ. ஆகும். இதன் மூலம் இவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளது எனலாம்.  

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

இவ்வூருக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வூர்கள் சேரநாட்டிலிருந்து மதுரை செல்லும் வணிகப் பெருவழியில் உள்ளன. எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.