Panchayat President husband threatens JCB driver by asking for usury

கரூர் அடுத்த பசுபதிபாளையம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(42). திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் தனியார் நிறுவனத்தில் ஜேசிபி வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம், கோயம்பள்ளி ஊராட்சி தலைவரின் கணவரான திமுக பிரமுகர் மயில்ராஜ் மற்றும் பழனிசாமி, சரவணன் ஆகிய மூன்று பேரிடம் குடும்ப செலவுகளுக்காக சுமார் ஒரு லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். கந்து வட்டியின் அடிப்படையில் இந்த கடன் வாங்கியதாக ஓட்டுநர் ரமேஷ் கூறுகிறார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புகந்து வட்டி வசூலுக்கு வந்த மூன்று பேரும் ரமேஷ் ஓட்டி வந்த ஜேசிபி வாகனத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இதுவரை அந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமலும், வாகனத்தை மீட்டுத் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் ஜேசிபி வாகனத்திற்காக சுமார் 5 லட்சம் ரூபாய் ஓட்டுநர் ரமேஷ் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனுக்கு முறையாக வட்டி செலுத்தி வந்த நிலையில், கடந்த நான்கு மாத காலமாக வட்டி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சக்திவேல் ஓட்டுநர் ரமேஷ் செல்போனுக்கு அழைத்து, சாதி ரீதியாகத்தகாத வார்த்தைகளைப் பேசி, சொத்தை எழுதித்தருமாறு மிரட்டல் விடுத்த ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஓட்டுநர் ரமேஷ் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் ஜேசிபி வாகனத்தைப் பறித்துச் சென்ற ஊராட்சி மன்றத்தலைவரின் கணவரான மயில்ராஜ் மற்றும் பழனிசாமி, சரவணன் ஆகியோர்மீதும், வாகனத்திற்கு கடன் கொடுத்த சக்திவேல் மீதும் புகார் மனு அளித்துள்ளார்.