Panchayat leaders demands various thing on cuddalore, nalloore panchayat office

Advertisment

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு சுமார் 64 கிராம ஊராட்சிகள் உள்ளன. நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 40 கிராம ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கான காரணம் பற்றி அவர்கள் கூறும்போது, "ஊராட்சிகளில் 8 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பணிகள் முழுவதும் முடிப்பதற்கு முன்பே, திட்டத்திற்கான பணத்தைப் பரிமாற்றம் செய்யுமாறு நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் கூறியுள்ளார்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜரிடம் விளக்கம் பெறுவதற்காக ஊராட்சிகள் கூட்டமைப்புத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் நேற்று காலை ஒன்றிய அலுவலகத்திற்கு வந்துள்ளனர். ஒரு மணி நேரம் காத்திருந்தும் ஊராட்சி மன்றத் தலைவர்களை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் சந்திக்கவில்லை என்றும் இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் நல்லூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்" என்றும் தெரிவித்தனர்.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜும் அங்கு வந்து ஊராட்சி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டம் பற்றி விளக்கிக் கூறினார். இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.