Panchayat leaders arrested for struggle

Advertisment

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் தலைவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், ஊராட்சி பணிகளில் திமுகவினர் தலையிடுவதாக குற்றஞ்சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த செந்துறை போலீஸார், ஊராட்சி மன்றத் தலைவர்களை போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மறியல் செய்த 20க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட தகவலறிந்த அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் தனது கட்சியினருடன்,கைது செய்யப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisment

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, “கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்தால் தான் நாங்கள் மறியல் போராட்டத்தை கைவிடுவோம்” என்று ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுகவினர் தெரிவித்தனர். அப்போது காவல்துறையினர், “உயர் அதிகாரிகளிடம் கேட்டு தான் அவர்களை விடுதலை செய்வதா சிறைக்கு அனுப்புவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று கூறினார்கள். விடுதலை செய்யப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அதிமுகவினர் அங்கேயே அமர்ந்திருந்தனர். இந்த நிலையில், மாலை 6 மணி அளவில் கைது செய்யப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் அனைவரையும் போலீசார் விடுதலை செய்தனர். அதன் பிறகே அதிமுகவினரும் போராட்டத்தை கைவிட்டனர்.