ADVERTISEMENT

காவல்துறையினரின் பாதுகாப்போடு வாக்களிக்க சென்ற ஊராட்சி மன்றத் தலைவர்!

12:44 PM Oct 09, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09/10/2021) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அதேபோல், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகளும் வரும் அக்டோபர் 12ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்டதால் தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில், எதிர்ப்பை மீறி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இந்துமதி பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனால் நாயக்கனேரியில் உள்ள 9 வார்டு, ஒன்றியக் குழு பதவிகளுக்கு ஒருவர் கூடப் போட்டியிடவில்லை. இதனிடையே, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இந்துமதி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இப்பகுதியில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலைப் புறக்கணிப்பதாக நாயக்கனேரி பஞ்சாயத்து மக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, அந்தப் பஞ்சாயத்துக்குச் சென்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை எஸ்.பி. ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்டக் குழு உறுப்பினர் பதவிக்கு மட்டுமே இன்று தேர்தல் நடப்பதால் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்களித்தனர்.

இந்த நிலையில், போட்டியின்றித் தேர்வான ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதி பாண்டியன், பெரியன்குப்பத்தில் இருந்து 12 கி.மீ தொலையில் உள்ள மலை கிராமமான நாயக்கனேரிக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்களிக்கச் சென்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT