Skip to main content

ஊராட்சி தலைவர் மனைவியா? கணவரா? உறுப்பினர்கள் எதிர்ப்பால் பின்வாசல் வழியாக வெளியேறிய தலைவி!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தலைவராக மனைவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டால் அங்கு ஆக்டிவ் தலைவராகச் செயல்படுபவர்கள் பெரும்பாலும் கணவா்கள்தான். திட்டம் வகுப்பதில் இருந்து நிதி ஒதுக்குவது வரை கணவா்களின் சொல்படி தான் எல்லாம் நடக்கும். இதனால் தோ்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் வெறும் பொம்மையாகதான் இருப்பர். அதிலும் ஆளூம் கட்சியைச் சோ்ந்தவா் என்றால் தலைவர் இருக்கையிலும் கணவா் உட்காருவார், அதேசமயம் மன்றக் கூட்டத்தையும் அவா் தான் நடத்தக்கூடிய நிலையும் உள்ளது.

 

அதுபோலத்தான் குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் விஜிலா செல்வின். இவருடைய கணவா் ரமேஷ் கடந்த முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா். மேலும் இவா் அ.தி.மு.க. பிரமுகராகவும் உள்ளார். மனைவி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தாலும் ரமேஷ் தான் அங்கு ஆக்டிவ் தலைவா். ஊராட்சி மன்றத்தில் உறுப்பினா்கள் மற்றும் மக்கள் சென்றால் எல்லாமே என் கணவா் தான், அவா்தான் முடிவு எடுக்க வேண்டும் எதுவாக இருந்தாலும் அவரிடமே பேசிக் கொள்ளுங்கள் என அசால்டாகச் சொல்லிவிடுவாராம். இதனால் சில உறுப்பினா்களும் மக்களும் ஊராட்சி மன்றத் தலைவியிடம் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனா். 

 

இந்த நிலையில் கல்குறிச்சி ஊராட்சி மன்ற சிறப்புக் கூட்டம் நடந்தது. இதில் மொத்தமுள்ள 9 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். மேலும் ஊராட்சி மன்றத் தலைவியின் இருக்கை அருகில் கணவா் ரமேஷ் உட்கார்ந்து இருந்து உறுப்பினா்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறிக் கொண்டிருந்தார். எதுவும் பேசாமல் மௌனமாக இருந்த தலைவியிடம் சில உறுப்பினா்கள் நீங்கள் தோ்ந்தெடுக்கபட்ட தலைவரா? அல்லது உங்கள் கணவா்தான் தலைவரா? உரிய விளக்கம் எங்களிடம் தர வேண்டும். எல்லாவற்றுக்கும் அவா்தான் பதில் கூறிக் கொண்டியிருக்கிறார் என எதிர்ப்பு தெரிவித்து அந்த உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் உறுப்பினா் நித்யா என்னுடைய கணவரை மன்றக் கூட்டத்திற்கு அனுப்பினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீா்களா? எனக் கேள்வி கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


இதைத் தொடா்ந்து கூட்டத்தில் இருந்து பாதியிலேயே தலைவியும் அவரது கணவரும் பின்வாசல் வழியாக வெளியேறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்