தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு தலைவர் பதவியை அ.தி.மு.கவை சேர்ந்த சக்திவேல் என்பவர் 50 லட்சத்துக்கும், துணைத் தலைவர் பதவியை தே.மு.தி.கவை சேர்ந்த முருகன் என்பவர் 15 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்ததாக கூறப்படுகிறது. ஏலத்தொகையை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவுகின்றன. ஏலம் விடப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை அடுத்து, இது குறித்து விசாரிக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.