/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_262.jpg)
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடசேரி கிராமத்தில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தாருக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு இருந்துவந்துள்ளது. இதற்காக, பஞ்சாயத்து நடந்துள்ளது. இந்தப் பஞ்சாயத்துஅறிவித்த முடிவுக்கு ஹரி ஒத்துக்கொள்ளவில்லை.
இதனால், ஹரியின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவரது குடும்பத்தாரோடு ஊர் மக்கள் யாரும் பேசக்கூடாதுஎன்று வீடு வீடாகச் சென்று சொல்லியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கட்டப்பாஞ்சாயத்து செய்து தங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து அவமானப்படுத்துவதாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் பஞ்சாயத்துசெய்தவர்கள் மீது உமராபாத் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். அந்தப் புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், காவல்துறையினரை கண்டித்து உமராபாத் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்து ஹரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் தெரிந்து உள்ளுர் போலீஸார் வந்து அவர்களை கலைந்துசெல்ல அறிவுறுத்தியுள்ளனர். அப்போதும் அவர்கள் அசைந்துகொடுக்கவில்லை. உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்றதன் அடிப்படையில், விசாரணை நடத்திவருகின்றனர் காவல்துறையினர். இதனால் கலைந்துசென்றனர்.
ஏற்கனவே, காதல் திருமணம் செய்துகொண்டவர்களை குடும்பத்தாரே ஏற்றுக்கொண்டபோது,அந்தபஞ்சாயத்தார் ஏற்றுக்கொள்ளாமல் அபராதம் விதித்ததோடு, அதைக் கட்டவில்லையென காலில் விழச்செய்து பிரச்சனை செய்தனர். பின்பு, கடன் பிரச்சனையில் கட்டப்பஞ்சாய்து செய்து ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததாக, கடந்த மூன்று மாதத்தில் மட்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல கட்டப்பஞ்சாயத்து பிரச்சனைகள் மீது புகார் தந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்து இதுபோல் கட்டப்பஞ்சாயத்து அராஜகங்கள் அதிகரித்தபடியே உள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)